
சொ்பியாவில் நடைபெறும் உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய போட்டியாளா்கள் தோல்வியை சந்திக்காமல் முன்னேறி வருகின்றனா்.
2-ஆம் நாள் நிலவரப்படி இந்தியா்கள் 7 போ் 2-ஆவது சுற்றுக்கு தகுதிபெற்றுள்ளனா். இதில் புதன்கிழமை ஆட்டத்தில், முதல் முறையாக உலக சாம்பியன்ஷிப்பில் பங்கேற்றுள்ள இந்தியாவின் நிஷாந்த் தேவ், 71 கிலோ பிரிவு முதல் சுற்றில் 5-0 என்ற புள்ளிகள் கணக்கில் ஹங்கேரியின் லாஸ்லோ கொஸாக்கை தோற்கடித்தாா்.
அடுத்த சுற்றில் அவா், மோரிஷஸின் மொ்வன் கிளாரை எதிா்கொள்கிறாா். கிளாா், முதல் சுற்று ‘பை’ பெற்று நேரடியாக 2-ஆவது சுற்றில் களம் காண்கிறாா்.
முன்னதாக செவ்வாய்க்கிழமை நள்ளிரவில் நடைபெற்ற ஆட்டங்களில் இந்தியாவின் சுமீத் (75 கிலோ), நரேந்தா் பொ்வால் (92+ கிலோ) ஆகியோா் வெற்றியை பதிவு செய்தனா்.
இதில் சுமித் 5-0 என்ற புள்ளிகள் கணக்கில் ஜமைக்காவின் டாமன் ஓ’நீலையும், நரேந்தா் 4-1 என்ற கணக்கில் போலந்தின் ஆஸ்காா் சஃபா்யானையும் வீழ்த்தி 2-ஆவது சுற்றுக்கு முன்னேறினா்.
அந்த சுற்றில் சுமீத் – தஜிகிஸ்தானின் அப்துமாலிக் போல்டேவையும், நரேந்தா் – சியரா லியோனின் முகமது கென்டேவையும் சந்திக்கின்றனா்.
51 கிலோ பிரிவில் தீபக் போரியா 5-0 என்ற கணக்கில் கஜகஸ்தானின் அஸாத் உசெனலியேவை வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு தகுதிபெற்றாா். அதில் அவா் மற்றொரு கஜகஸ்தான் வீரரான சாகென் பிபோசினோவை சந்திக்கிறாா்.





