ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச ஆளுங்கட்சித் தலைவர்கள் கூட்டமொன்றுக்கு திடீர் அழைப்பு விடுத்துள்ளார்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ச ஆகியோர் தலைமையில் இன்று பிற்பகல் 5.30 மணிக்கு அலரி மாளிகையில் இந்தக் கூட்டம் இடம்பெறவுள்ளது.
கெரவலப்பிட்டி, யுகதனவி மின் உற்பத்தி நிலையத்தின் பங்குகளை அமெரிக்க நிறுவனத்துக்கு வழங்கும் அரசின் முடிவுக்கு அரசாங்கத்தில் இடம்பெற்றுள்ள கட்சிகள் கடும் எதிர்ப்புத் தெரிவித்துவருகின்றன.
அத்துடன், இந்த உடன்படிக்கையைக் கைவிடாவிட்டால் பாரிய அளவிலான தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடவுள்ளதாகவும், இதனால் நாடு இருளில் மூழ்கும் எனவும் மின்சார சபை தொழிற்சங்கங்கள் எச்சரித்துள்ளன.
இந்நிலையிலேயே, இன்றைய ஆளுங்கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் இந்த விவகாரம் குறித்து முக்கியமாக ஆராயப்படவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.






