சுகாதார பணியாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்படாததால், எதிர்வரும் 9 ஆம் திகதி ஒரு நாள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவதற்கு சுகாதார தொழிற்சங்கம் தீர்மானித்துள்ளது.
கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட சங்கத்தின் பிரதிநிதிகள் இதனைத் தெரிவித்துள்ளனர்.
மேலும், குறித்த காலப்பகுதிக்குள் தமது பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைத்தால் தொழிற்சங்கங்கள் நடவடிக்கையை இடைநிறுத்துவதாக இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹண தெரிவித்தார்.
தமது பிரச்சினைகளுக்கு தீர்வு காண கடந்த காலங்களில் பல்வேறு தொழிற்சங்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதாகவும், உண்மையான பிரச்சினைகளுக்கு தீர்வு காண அமைச்சர்கள் தலையீடு செய்யாத காரணத்தால் மீண்டும் தொழிற்சங்க நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டியுள்ளதாகவும் சுகாதார தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது.
எதிர்வரும் 9 ஆம் திகதி நடைபெறும் வேலைநிறுத்தத்தின் போது மகப்பேறு மற்றும் சிசு பராமரிப்பு உள்ளிட்ட அத்தியாவசிய சேவைகளுக்கு இடையூறு ஏற்படுவதைத் தடுக்க இயன்றவரை முயற்சி செய்வதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுமார் 15 சுகாதார தொழிற்சங்கங்கள் இந்த பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதாக அரசாங்க தாதியர் சங்கத்தின் தலைவர் சமன் ரத்னப்பிரிய தெரிவித்துள்ளார்.






