யாழ்ப்பாணம், ஸ்ரான்லி வீதி அகலிப்பு பணியில் ஆளும் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களின் பலப் பரீட்சை இடம்பெறுவதாக வீதி வர்த்தகர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
யாழ்ப்பாணம் ஸ்ரான்லி வீதியை வர்த்தகர்கள் மற்றும் பயணிகளின் நன்மை கருதி அகலிப்பு செய்து தருமாறு யாழ்ப்பாணம் மாநகர சபை 2019ஆம் ஆண்டு வீதி அபிவிருத்தி அதிகார சபை கோரிக்கை விடுத்தது.
அதனடிப்படையில், பிரதேச செயலக ஒத்துழைப்புடன், தற்போது வீதி அபிவிருத்தி அதிகார சபையால் ஓர் ஒப்பந்த நிறுவனம் மூலம் வீதி அகலிப்பு செய்யப்படுகின்றது.
இவ்வாறு இடம்பெறும் பணியின்போது, ஸ்ரான்லி வீதியில் உள்ள சிறீதர் தியட்டர் முன்பாக வீதியை நோக்கி 7 அடி நீளத்தில் இருந்த அலங்கார தொட்டி இடித்து அகற்றப்பட்டது.
இதன்போது, சர்ச்சை உருவெடுத்து, இதனால் உடைக்கப்பட்ட அலங்கார தொட்டி மீண்டும் அமைக்கப்படுகின்றபோதும், வர்த்தகர்களின் கடைகள் மட்டும் தொடர்ந்தும் இடிக்கப்படுகின்றது.
இவ்வாறு கடைகள் இடிக்கப்படும்போது சிறீதர் தியட்டர் முன்பாக, அரசியல் கட்சிக்காக அமைக்கப்படுகின்றதாக கூறும் குற்றச்சாட்டுத் தொடர்பில், மாநகர சபையிடம் தொடர்பு கொண்டு கேட்டபோது, ஸ்ரான்லி வீதி அபிவிருத்தி அதிகார சபையின் ஆளுகைக்கு உட்பட்டது என்ற வகையில் அனைத்துப் பணிகளும் வீதி அபிவிருத்தி அதிகார சபையே முன்னெடுக்கின்றதே அன்றி அதற்கும் மாநகர சபைக்கும் தொடர்பு கிடையாது எனத் தெரிவிக்கப்பட்டது.
அவ்வாறானால், சிறீதர் தியட்டருக்கு மட்டும் ஏன் இந்த விதி விலக்கு என வீதி அபிவிருத்தி அதிகார சபையிடம் கேட்டபோது, விதிவிலக்கு அல்ல அனைவரின் ஒப்புதலை பெற்றே இடிக்கும் பணி இடம்பெற்றுள்ளது.
எனினும், ஒப்பந்தகார நிறுவனத்தினர் சிறீதர் தியட்டரில் உள்ளவர்களின் அனுமதியை பெறாமல் இடித்துவிட்டனர்.
இதனால், அவர்கள் ஆட்சேபனை தெரிவித்தமையால் மீளக் கட்டிக் கொடுக்கப்படுகின்றது என்றனர்.
இதுதொட்பில், ஈ.பி.டி.பியினரின் கருத்தை தேடியபோது, வீதி அகலிப்பு பணியை எடுத்துள்ளது. ஓர் அரசியல்வாதியின் ஆதரவாளர் என்ற அடிப்படையில் அவர்கள் ஓடிவந்து எந்தவொரு தகவலும் இன்றி எமது கட்டுமானத்தையே முதலில் இடித்தமையாலேயே அதனை மீள அமைக்குமாறு கோரினோம் என்கின்றனர்.
இதேநேரம், இந்த ஒப்பந்தகாரருக்கும் எமக்கும் தொடர்பில்லை என்கின்றனர் நாடாளுமன்ற உறுப்பினர் தரப்பு. எனவே, வீதி அகலமாக்கும் பணியின் போது இவ்வாறான சர்ச்சை உருவாகியுள்ளமை தொடர்பில் பொதுமக்கள் விசனம் வெளியிட்டுள்ளனர்.






