திருகோணமலை புத்திஜீவிகள், தமிழரசுக் கட்சி ஆதரவாளர்கள் என்ற பெயரில் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தனுக்கு ‘தமிழரசுக் கட்சியின் மீதான நம்பிக்கையும் திருகோணமலை மக்களின் அவநம்பிக்கையும்’ என்ற பெயரில் நேற்று ஒரு கடிதம் அனுப்பி வைக்கப்பட்டிருக்கின்றது. நகரப் பிரமுகர்கள் பலர் அதில் ஒப்பமிட்டிருக்கின்றனர் எனத் தெரிவிக்கப்படுகின்றது.
இதன் பிரதிகள் தமிழரசுக்கட்சித் தலைவர் மாவை சேனாதிராசா, செயலாளர் சத்தியலிங்கம், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளின் தலைவர்கள், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆகியோருக்கும் அனுப்பப்பட்டிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது.
திருகோணமலை மாவட்டத்தில் தமிழர் நிலங்கள் பறிபோதல் உட்பட 15 விடயங்கள் விவரமாக இந்தக் கடிதத்துடன் இணைக்கப்பட்ட பட்டியல் ஒன்றில் விவரிக்கப்பட்டிருக்கின்றன.
அந்தக் கடிதத்தின் விவரம் வருமாறு:- |
எழுபதாண்டு அரசியல், ஆயுத போராட்டத்தின் பின்பும் ஏதிலிகளாக்கப்பட்ட இனம் பழத் தமிழினமே ஆகும். ஆயுதக் கலாசாரம் ஓய்ந்தால் அரசியல் தீர்வைப்பெற்றிடலாம் எனும் பசப்பு வார்த்தையும் பொய்யாகி ஆண்டுகள் ஆறிரெண்டாகிவிட்டடன.
2009 இற்குப் பின்னான காலத்தில் ஆற்றுப்படுத்தல், அபிவிருத்தி எனப் பேசிய
போதும், நினைவுத் தூபிகளில் கண்ணீர் விடுபவர்களும் கைது செய்யப்படும் அவலமே இன்றும் அரங்கேறி வருகின்றது. எதுவாகினும் தமிழ் மக்களின் அரசியல் அபிலாஷையை வென்று தரும் அமைப்பாகத்
தமிழ் தேசியக் கூட்டமைப்பை இமயமாக நம்பிய தமிழர்களுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் இயலாமை வெள்ளிடைமலையாகத் தெரிகிறது.
ஆயிரம் கதைபேசியும் ஆனது ஒன்றுமில்லை, கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் பாதியாசனத்தை இழந்த கட்சிக்கு அதனால் பட்டசூடு கட்சியின் தலைமைகளுக்கு சுடவில்லை என்பது தமிழ்த் தேசிய அரசியவின் சாபக்கேடு.
தமிழ்த் தேசிய சிந்தனையற்ற சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமிழர்கள் விட்ட தவறைச் சுட்டிக்காட்டும் அளவுக்கு, சிங்கள அரசு செய்த கொடுமைகளையும், குற்றங்களையும் தட்டிக் கேட்கத் தவறுகின்றனர்.
சட்டத்தின் பால் தாம் சொல்வதே சரியென வகுப்பெடுத்து. தமிழ்த் தேசியத்தையும், ஒப்பற்ற உயிர்த் தியாகத்தையும் உள்ளங்கையில் அடைக்க விழைகின்றனர்.
அவர்கள் செப்பனிட்ட பாதையிலேயே பயணிக்க விரும்புகின்றார்களே அன்றி, இன்றைய பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் பாதையைத் தேடுபவர்களாக இல்லை பதவிக்காலத்தை
கடத்த பல கட்டுக்கதைகள் விட்டுக் கொண்டிருக்கின்றனர்.
தமிழ்மக்கள் முன்னால் உள்ளவினைகளை அறுக்க எந்த உபாயத்தையும் மேற்கொள்ளவில்லை என்பது உள்ளங்கை நெல்லிக்கனி.தானைத் தலைவனற்ற சேனையாக தமிழ் இனம் தவிக்கிறது.
அன்று தந்தை செல்வா அமிர்தலிங்கம் அடையாளம் காட்டி, தன் கண்முன்னே அவர் செயலையும் கண்டார், நாபாளுமன்றப் பதிவியில் இருந்து விலகி கட்சித் தொண்டனாக இறப்புவரை இயங்கினார். இன்றளவும் அவர் போற்றப்படுவதற்கும் ஏற்றப்படுவதற்கும் இதுவே காரணம்.
இவ்வழி வந்த கட்சியின் தலைமை இன்று பதவியை இறுகப் பற்றிக் கொண்டிருக்கின்றது. இயலாமை உச்சத்தில் இருந்தும், இயக்கம் இம்மியளவும் இல்லாத காலத்திலும் செல்லாத நாடாளுமன்றம் பெருஞ்செல்வமாகத் தெரிகின்றது ஐயா சம்பந்தன் அவர்களுக்கு.
”தலைவன் எவ்வழி மக்கள் அவ்வழி” எனும் கூற்றின் எதிர்மறைப் பண்புக்கு அமைய தமிழர்கள் தலைவர்களால் வழிநடத் தப்படும் அவலமே இங்கு அரங் கேறிக் கொண்டிருக்கின்றது.
இது ஒரு புறமிருக்க, திருகோணமலையில் தமிழர் அரசியலால் ஒற்றைப்புல்லையேனும் பிடுங்கிப்போட முடியவில்லை, கடந்த தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மூத்த தலைவர்கள் தமிழர் தாயகமளங்கும் தோற்கடிக்கப்பட்ட நிலையில், தோற்கடிக்கப்படும் காரணத்துக்குப் பொறுப்பான தங்களை – தலைவர் சம்பந்தனை திருகோணமலை மக்கள் வெற்றிபெறச் செய்தார்கள்.
இவ்வாறு, இரா. சம்பந்தன் எனும் பெருமையைப் பெற்றுத் தந்த திருகோணமலை மக்களுக்கு சம்பந்தன் ஐயா எவ்வாறு செஞ்சோற்றுக் கடன் கழிக்கப் போகின்றார்? தேர்தல் காலத்தில் பேசியதற்கிணங்க திருகோணம்லைக்கு எப்போது ஒரு நாடாளுமன்ற உறுப்பினரைத் தரப்போகின்றார்? அவர் காற்றில் விட்ட வாக்குறுதிகளில் இதுவும்
சேர்கிறதா?
தனது இறுதித் தேர்தல் வரை வெற்றியைத் தந்து நாடாளுமன்ற உறுப்பினராக சம்பந்தனை ஆக்கிய திருகோணமலை மக்களுக்கு, இனி தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர் இல்லை எனும் ஒரு பரிசை தந்துவிட்டா சம்பந்தர் செல்லப்போகிறார்?
இது திருகோணமலை வரலாற்றிலும், சம்பந்தரின் அரசியல் வரலாறிலும் கரும்புள்ளிகளாகப் பதிவாகப் போகிறது என்பதை ஐயா எப்போது புரிந்து கொள்வார்?
தமிழரசுக் கட்சியின் பதாதைகளிலும், விளம்பரங்களிலும் தொடர்ந்து தந்தை செல்வநாயகத்தின் படம் மட்டும் தான் இடம் பிடிக்கப் போகின்றதா? எதிர்காலத்தில் எந்தவொரு அடையாளத்தையும் சம்பந்தர் ஜயா விட்டுப் பொகவில்லையா? இதற்கு சம்பந்தன் ஐயாவே பதில் சொல்ல வேண்டும். இது தனியொருவனது கேள்வியல்ல.
தமிழ்த் தேசியத்தையும், தமிழரசுக் கட்சியையையும் நேசிக்கும் ஒவ்வொரு குடிமகனும் கேட்கும் கேள்வியாகும். இக் கேள்விகளுக்கான பதில் என்பதை விட ஆக்கபூர்வமான அடைவை எதிர்பார்த்தவர்களாக!
சம காலத்தில், திருகோணம்லையில் தீர்க்கவேண்டிய, நாடாமன்ற உறுப்பினரால் சீர்செய்யக்கூடி சில பிரச்சினைகளை மட்டும் கொண்ட பட்டியல் கடிதத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.
இது தனிமனிதர்களின் மனதைப் புண்படுத்துவற்கானது அல்ல. ஓர் இனத்தின் விடி விற்கானது. – என்று உள்ளது.






