
ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வரும் உலக கோப்பை உலக கோப்பை தொடரில் வரும் ஞாயிற்றுக்கிழமை இந்தியஅணியும், நியூசிலாந்து அணியுடன் மோதுகிறது.
இதுவரை டி20 உலக கோப்பை வரலாற்றில் நியூசிலாந்தை இந்திய அணி வென்றது இல்லை. இதனால் வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெற இருக்கும் போட்டியில் நியூசிலாந்தை வீழ்த்தி இந்தியா வெல்ல வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.
தற்போது நடைபெற்று வரும் டி20 உலக கோப்பை தொடரில் இந்தியா தன்னுடைய முதல் போட்டியில் பாகிஸ்தான் எதிர்கொண்டது. இதில் இந்த போட்டியில் உலக கோப்பை வரலாற்றில் பாகிஸ்தான் தங்களை வீழ்த்தியதில்லை என்று கெத்தாக களமிறங்கிய இந்திய அணிக்கு அதிர்ச்சி கொடுத்து பாகிஸ்தான் அணி வெற்றி பெற்றது.
இதேபோல நியூசிலாந்தும் தன்னுடைய முதல் போட்டியில் பாகிஸ்தானை எதிர்கொண்டு தோல்வி கண்டது. இதனால் இந்தியா, நியூசிலாந்து அணிகளுக்கு அடுத்த போட்டிகள் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
முதல் முறையாக டி20 உலக கோப்பை தொடரில் இந்தியா – நியூசிலாந்து அணிகள் 2007 மோதியது. அப்போது இந்திய அணி கோப்பையை கைப்பற்றினாலும், அந்த தொடரின் லீக் போட்டியில் நியூஸிலாந்து அணியிடம் இந்திய அணி தோல்வி அடைந்தது.
இதையடுத்து, 2016ம் ஆண்டு நடைபெற்ற ஆசிய கோப்பை தொடரில் இந்தியாயை நியூசிலாந்து அணி தோற்கடித்தது. இது மட்டுமில்லாமல் கடந்த சில ஆண்டுகளில் மிக முக்கியமான டி20 உலகக் கோப்பை அரை இறுதிப் போட்டி மற்றும் உலக சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியிலும் கோலி தலைமையிலான இந்திய அணி, வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து அணியிடம் தோல்வி அடைந்துள்ளது.
இந்நிலையில், துபாயில் நடைபெற இருக்கும் போட்டியில் இந்தியா-நியூசிலாந்து இரு அணிகளும் எத்தகைய வியூகங்களுடன் களம் காண உள்ளது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும். இரு அணிகளும் முதல் போட்டியில் தோல்வி அடைந்துள்ளதால், அடுத்து நடைபெறும் போட்டியில் வெற்றி பெற்றே ஆக வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.





