நீர்நிலைகள் பிறர் உயிர்காப்பு (Life Guard) தொடர் பயிற்சியில் கலந்து கொண்டு முதலிடம் பெற்ற கனகரட்னம் நிறோஜனை, அரச அதிபர் க.விமலநாதன் பாராட்டி பதக்கம் அணிவித்து கௌரவித்துள்ளார்.
குறித்த நிகழ்வு மாவட்ட செயலக விளையாட்டு பிரிவினரின் அனுசரணையில் நேற்று காலை காலை மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது.
மேலும் தெரியவருகையில்,
சர்வதேச தரத்திற்கமைவான (Level 1,2,3) 21 நாட்கள் கொண்டதான நீர்நிலைகள் பிறர் உயிர்காப்பு (Life Guard) தொடர் பயிற்சிகள் கடந்த 07.10.2021 தொடக்கம் 27.10.2021 வரையான காலப்பகுதியில் யாழ்/காரைநகரில் இடம்பெற்றுள்ளது.
இப் பயிற்சியில் முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பிரதேச திம்பிலி கிராம லக்கிஸ்ரார் விளையாட்டுக் கழகத்தை சேர்ந்த கனகரட்னம் நிறோஜன், குறித்த போட்டியில் கலந்து கொண்டு முதல் நிலையை பெற்று மாவட்டத்திற்கு பெருமை சேர்த்துள்ளார்.
மாகாண விளையாட்டுத் திணைக்களத்தின் ஒழுங்குபடுத்தப்பட்ட குறித்த பயிற்சியில் முல்லைத்தீவு மாவட்ட விளையாட்டு பிரிவினரால் மாவட்ட உள்ளூர் வீரர்களை ஒழுங்குபடுத்தியுள்ளது.
ஏனையவர்களுக்கான உயிர்காப்புடன் நீச்சல் பயிற்சி மேம்படுத்தலுக்காக, மேலும் பல வீரர்கள் எதிர்காலத்தில் இப் பயிற்சியினை மேற்கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
இதன் போது மாவட்ட அரச அதிபர் குறித்த சாதனையாளரின் வெற்றி அனுபவங்கள் மற்றும் துறைசார் விடயங்கள் தொடர்பாக கலந்துரையாடினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.






