
இத்தாலியில் இரண்டு பிள்ளைகளைக் கொலை செய்து விட்டு, இலங்கையைச் சேர்ந்த தாயொருவர் தலைமறைவாகியுள்ளார் என்று தெரிவிக்கப்படுகின்றது. இத்தாலியில் வெரோனா நகரத்திலுள்ள பெண்கள் காப்பகத்தில் இந்தச் சம்பவம் நடந்துள்ளது என்று அந்த நாட்டு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
கொலைக்கான காரணம் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை.
இலங்கையை பூர்வீகமாகக் கொண்ட 33 வயதுடைய சச்சித்ரா நிசண்சலா பெர்ணான்டோ தேவ்த்ரா மஹவடுகே என்பவர், தனது சாபதி (11 வயது) மற்றும் சாந்தனி (03 வயது) மகள்களுடன் இத்தாலியில் வொரோனா நகரில் வசித்து வந்துள்ளார்.
வெனிஸ் சிறுவர் நீதிமன்ற உத்தரவின் கீழ் இரண்டு பிள்ளைகளும் அவர்களின் தந்தையிடமிருந்து பிரிந்து தாயுடன் வசித்து வந்துள்ளனர்.
இந்த நிலையில் குறித்த இரு பிள்ளைகளும் கொலை செய்து விட்டு, தாயார் தலைமறைவாகியுள்ளார்.
முதற்கட்ட விசாரணைகளில், உயிரிழந்த பெண்பிள்ளைகளின் உடலில் தாக்குதல் மேற்கொண்டதற்கான எந்த அறிகுறிகளும் இல்லை. அவர்களை மூச்சுத் திணறவைத்து கொலை செய்திருக்கலாம் என்று தெரியவந்துள்ளது.





