களுத்துறை போமுவெல பிரதேசத்தில், சட்டவிரோதமாகக் கசிப்பு காய்ச்சியவர்களை கைதுசெய்வதற்காக சென்ற பொலிஸ் குழுவினர் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில், இருவர் காயமடைந்துள்ளதோடு, நால்வர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
களுத்துறை தெற்கு, பொலிஸ் பரிசோதகர் ஒருவரும், பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவருமே இவ்வாறு காயமடைந்த நிலையில், நகொட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அத்துடன், பெண்கள் மூவரும், கசிப்பு வியாபாரத்தில் ஈடுபட்ட நபரொருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
போமுவெல பிரதேசத்தில் முன்னெடுக்கப்பட்டு வந்த கசிப்பு உற்பத்தித் தொடர்பில் பொலிஸாருக்கு வழங்கப்பட்டத் தகவலையடுத்து விசேட சுற்றிவளைப்பை பொலிஸ் குழுவினர் மேற்கொண்டனர்.
இதன்போது, கசிப்புடன் ஒருவரை கைதுசெய்து பொலிஸ் நிலையத்துக்கு அழைத்துவர முற்பட்டபோது, சந்தேக நபரும் பெண்கள் மூவரும் இணைந்து பொலிஸ் அதிகாரிகளின் கடமைக்கு இடையூறு விளைவித்துள்ளதுடன், பொலிஸ் அதிகாரிகளையும் தாக்கியுள்ளனர் எனத் தெரியவருகின்றது.






