நாட்டில் சிமெந்து தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில், தம்புள்ளையில் சீமெந்து வாங்க மக்கள் வரிசையில் நிற்கின்றனர்.
இதனால், பல தொழில்கள் முடங்கியுள்ளதாக சீமெந்து வியாபாரிகள் தெரிவிக்கின்றனர். தொழில் வீழ்ச்சியால் சீமெந்து தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்யுமாறு நுகர்வோர் கோரிக்கை விடுத்துள்ளனர். சில பிரதேசங்களில் சீமெந்து பெறுவதற்கு நீண்ட வரிசையில் காத்துக் கிடக்கின்றனர்.
இந்நிலையில், சீமெந்து கொள்வனவு செய்வதற்கு இன்று அதிகாலை 3 மணி முதல் தம்புள்ளையில் உள்ள கடையொன்றுக்கு முன்பாக நீண்ட வரிசையில் சீமெந்து பாவனையாளர்கள் நின்றுள்ளனர்.
தம்புள்ளை கிராமத்தை அண்மித்த கடையொன்றுக்கு நேற்றிரவு சீமெந்து லொறி வந்துள்ளதாக கிடைத்த தகவலையடுத்து, பல நாட்களாக சீமெந்து கொள்வனவு செய்ய முடியாத நிலையில், ஹபரணை போன்ற பிரதேசங்களில் மக்கள் நீண்ட வரிசையில் சீமெந்துக்காக காத்திருந்தனர்.
மேலும், ஒருவருக்கு 5 மூடை சிமெந்தே வழங்கப்படுகிறது. கடை ஊழியர் வாடிக்கையாளர்களின் வருகையைப் பார்த்து பட்டியலைப் பெற்று மக்கள் தொகைக்கு ஏற்ப சீமெந்து விநியோகம் மட்டுப்படுத்தப்பட்டு வழங்கப்படுகிறது.
நாட்டில் தற்போது நிலவும் சூழ்நிலையால் நாடு இவ்வாறான அழுத்தத்திற்கு உள்ளாகியுள்ளதாகவும், ஆனால், சரியான நிர்வாகம் இல்லாத காரணத்தால் இந்த நிலை ஏற்பட்டுள்ளதாகவும் சீமெந்து பாவனையாளர்கள் தெரிவிக்கின்றனர்.







