மலைநாட்டில் நிலவும் சீரற்ற காலநிலையால் மக்களின் நாளாந்த நடவடிக்கைகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக 7 குடும்பங்களை சேர்ந்த 22 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
பிற்பகல் வேளையில் பெய்யும் மழை வெள்ளம் மற்றும் மண்சரிவால் சிலர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அதன்படி, நுவரெலியா – இராகலை முதலாம் பிரிவு பகுதியில் வெள்ளம் புகுந்ததையடுத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
இச்சம்பவத்தில் வீடுகளின் கூரைகள் பாதிக்கப்பட்டுள்ளதுடன், வீடுகளின் தளபாடங்கள், பொருட்களும் பாதிக்கப்பட்டுள்ளது.
அதேவேளையில் பாதிக்கப்பட்டவர்களை தோட்ட மக்களின் தற்போதைய நிலை, உயர்மட்ட அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.
இதனையடுத்து, பாதிக்கப்பட்டவர்கள் தோட்ட சிறுவர் பராமரிப்பு நிலையத்தில் பாதுகாப்பு கருதி தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
இவர்களுக்கான நிவாரண உதவிகளை நுவரெலியா பிரதேச சபையின் ஊடாக மேற்கொள்ளப்படவுள்ளது.
இந்த பகுதியில் தொடர்ச்சியாக இவ்வாறான நிலைமையே காணப்படுவதாகவும், குடியிருப்பாளர்கள் அச்சம் தெரிவிக்கின்றனர்.
எனவே, உடனடியாக சம்மந்தப்பட்ட அதிகாரிகள் இதற்கு உரிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என குடியிருப்பாளர்கள் மேலும் கோரிக்கை விடுக்கின்றனர்.











