களைக்கொல்லிகள் இல்லாமல் பல பூச்சிக்கொல்லிகள் மற்றும் பூஞ்சைக் கொல்லிகளை இறக்குமதி செய்வதற்கு, நாளைய அமைச்சரவைக் கூட்டத்தில் அனுமதி பெறுவதற்கு அரசாங்கம் முயற்சித்து வருவதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹினி கவிரத்ன தெரிவித்துள்ளார்.
அவர் இன்று ஊடகங்களுக்கு வெளியிட்டுள்ள செய்தி அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
மேலும், இது பாரிய மோசடி நடவடிக்கையாகும். களைக்கொல்லிகள் இல்லாமல் நெல், சோளம், தேயிலை போன்ற பயிர்களை பயிரிட முடியாது என விவசாய நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
பாரியளவில் விவசாயச் செய்கைகளை மேற்கொண்டுவரும் விவசாயிகள் அனைவரும் இன்று பாரிய பிரச்சினைகளை எதிர்கொண்டுள்ளனர்.
இலங்கையில் சுமார் 150 வகையான விவசாய இரசாயனங்கள் பதிவுசெய்யப்பட்டுள்ளன. அவற்றில் 80 இரசாயனங்கள் களைக்கொல்லிகளாகும்.
கிழக்கு, ரஜரட்ட, மஹியங்கனை ஆகிய மகாவலி வலயத்தை சேர்ந்த விவசாயிகளுக்கு, களைக்கொல்லிகள், பூஞ்சைக்கொல்லிகள் விநியோகிக்கப்படாவிட்டால், விவசாயச் செய்கையை முன்னெடுப்பதில் அவர்கள் பாரிய சிரமங்களை எதிர்கொள்வர்.
அரசாங்கம் கூறும் பாரிய பொய்களை நம்பி விவசாயிகள் தற்பொது நெற்செய்கையை ஆரம்பித்துள்ளனர்.
ஆனால், வயல் நிலங்களிலுள்ள களைகளை அகற்றிக்கொள்ள முடியாத நிலைமை தற்போது அவர்களுக்கு ஏற்பட்டுள்ளது. இரசாயன உரங்களின் விலை பன்மடங்கு அதிகரித்துள்ளது.
கறுப்புச் சந்தையில் தரமற்ற போலி பூச்சிக்கொல்லிகளே உள்ளன. அரசாங்கம் சுமார் ஒரு மாதத்துக்கும் மேலாக பூச்சிக்கொல்லிகளை வழங்குவதாகக் கூறிவருகிறது எனினும் இதுவரை வழங்கவில்லை. எந்த இறக்குமதிக்கும் இதுவரை அனுமதி வழங்கவில்லை.
நாளைய அமைச்சரவைக் கூட்டத்தின்போது கண்களை மூடிக்கொண்டு பல விவசாய இரசாயனங்களுக்கு அனுமதியை கோரவுள்ளது. எனினும், அவற்றை மட்டும் வைத்துக்கொண்டு விவசாய செய்கையை மேற்கொள்ள முடியாது என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.






