அமைச்சர்கள் மூவரைப் பதவி நீக்க அவசர கலந்துரையாடல்!

அமைச்சரவை தீர்மானத்தை பகிரங்கமாக விமர்சித்த அமைச்சர்களைப் பதவி நீக்கம் செய்யுமாறு, ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுக்கும் வகையில் அரசின் பின்வரிசை உறுப்பினர்கள் அவசர கலந்துரையாடல் ஒன்றை நடத்தி வருகின்றனர் என்று ஆளும் கட்சியை மேற்கோள்காட்டி ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

அமைச்சரவை தீர்மானத்தை பகிரங்கமாக விமர்சித்த குற்றச்சாட்டின் பேரில் அமைச்சர்களான வாசுதேவ நாணயக்கார, விமல் வீரவன்ச மற்றும் உதய கம்மன்பில ஆகியோரை நீக்குவது தொடர்பில் ஆலோசிக்கப்பட்டு வருகின்றது.

ஐரோப்பிய பயணத்தை முடித்துக்கொண்டு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச வந்தவுடன் இதனை விளக்கமளிக்க, பின்வரிசை உறுப்பினர்கள் தயாராகி வருகின்றனர். அதற்கு முன்னதாக பிரதமர் மஹிந்த ராஜபக்சவுடன் பேச்சு நடத்தப்படவுள்ளது.

இதேவேளை, அரசை விமர்சிக்காமல் அமைச்சுப் பதவியைத் துறந்துவிட்டு, சமூகத்தில் எதனையும் கூற வேண்டும் என பின்வரிசை உறுப்பினர்கள் ஏற்கனவே பகிரங்கமாகத் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், கெரவலப்பிட்டி மின் உற்பத்தி நிலையத்தின் பங்குகளை அமெரிக்க நிறுவனத்துக்கு விற்பனை செய்தல் உட்பட எல்.என்.ஜி. கொடுக்கல் வாங்கல்களுக்கு எதிராக 11 அரச கட்சிகளின் பங்குபற்றுதலுடன் கடந்த 29 ஆம் திகதி புறக்கோட்டையில் மக்கள் பேரவை கூட்டப்பட்டு அரசை மேற்படி மூன்று அமைச்சர்களும் கடுமையாக விமர்சித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply