நவாலியில் வீதி அபிவிருத்திக்கு தடையாக இருந்த மரத்தை வெட்ட யாழ். மாவட்ட அரச அதிபர் க.மகேசன் மரக்கூட்டு ஸ்தாபத்திற்கு உத்தரவிட்டுள்ளார்.
ஆனைக்கோட்டையிலிருந்து நவாலியூடாக காரைநகர் நோக்கி செல்லும் வீதி அபிவிருத்திக்கு தடையாக இருந்த 3 வாகை மரங்கள் நாளை காலை யாழ். பிரதேச மரக் கூட்டுஸ்தாபனத்தால் தறித்து அகற்றப்படவுள்ளது.
கடந்த மூன்று மாதங்களுக்கு முன் யாழ். பிரதேச மரக் கூட்டுஸ்தாபனம் வீதி அபிவிருத்தி அதிகார சபை மற்றும் வலி. தென்மேற்கு பிரதேச செயலாளரின் வேண்டுகோளுக்கு இணங்க மூன்று வாகை மரங்களையும் வெட்ட முற்பட்டபோது, வீதி அபிவிருத்திக்கு இடையூறாக இருந்த ஒரு சிலரின் எதிர்ப்பால் பிரதேச செயலாளருக்கு அறிவித்து விட்டு மரங்களை தறியாது விட்டுச் சென்றனர்.
இதனால், உலக வங்கியின் நிதியில் மேற்கொள்ளப்படும் வீதி அபிவிருத்தி அதிகார சபைக்கு உரித்தான குறித்த வீதி அபிவிருத்தி 150 மீற்றர் நீளம் தடைப்படும் அளவிற்கு சர்ச்சையாகி இருந்தது.
தற்போது, மேற்படி விடயத்தை முழுமையாக நவாலி மக்கள் மற்றும் நவாலி பொது அமைப்புக்கள் ஒன்று கூடி பிரதேச செயலாளர் யசோதா உதயக்குமார் மற்றும் யாழ். மாவட்ட அரச அதிபர் க.மகேசன் ஆகியோரின் விசேட கவனத்திற்கு கொண்டு சென்றனர்.
அதனடிப்படையில், மரத்தை வெட்ட மாவட்ட அரசாங்க அதிபர் மரக்கூட்டு ஸ்தாபத்திற்கு உத்தரவிட்டுள்ளார்.
மேலும், மரம் தறிக்கும் போது சர்ச்சையை யாராவது ஏற்படுத்தினால் சட்டத்தின் முன் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது.






