மீண்டும் ஆட்சிக்கு வந்தால் விவசாயிகளுக்கு பாதிப்பு ஏற்பட விடமாட்டேன்! – மைத்திரி

மீண்டும் ஆட்சிக்கு வந்தால் விவசாயிகளுக்கு எத்தகைய பாதிப்பும் ஏற்பட விடமாட்டேன் எனவும், இயற்கை உரங்களை முறையாகப் பயன்படுத்த விவசாயிகளை வழிநடத்துவதே தனது நோக்கமாகும் என்றும் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

பகமுன பிரதேசத்தில் உள்ள விவசாயிகளால் முன்னெடுக்கப்பட்ட உண்ணாவிரத போராட்டத்தின் மத்தியில் பேசும்போதே அவர் இவ்வாறு தெரிவித்திருந்தார்.

மேலும், விவசாயிகள் குறித்து தற்போதைய அரசாங்கத்திடம் நான் எந்தளவுக்கு பேசினாலும் அரசாங்கம் செவிமடுப்பதில்லை. கமத்தொழில் அமைச்சர் விவசாயத்தை அறிந்தவர் அல்ல. நான் பல முறை கமத்தொழில் அமைச்சருடன் விவசாயிகளில் பசளை பிரச்சினை பற்றி பேசினேன். எனினும் சாதகமான பதில் கிடைக்கவில்லை.

சில இராஜாங்க அமைச்சர்கள் எனக்கு எதிராக சேறுபூசும் பிரசாரங்களை முன்னெடுத்து வருகின்றனர். விவசாயிகள் எதிர்நோக்கும் பிரச்சினை காரணமாக என்னால், பொலன்நறுவைக்கு செல்ல முடியாதுள்ளது என நான் கூறினேன்.

அதனை அடிப்படையாக கொண்டே ராஜாங்க அமைச்சர்கள் எனக்கு எதிராக சேறுபூசும் பிரசாரங்களை முன்னெடுத்துள்ளனர். அவற்றை நான் கவனத்தில் கொள்ளப் போவதில்லை.

மீண்டும் நான் ஆட்சிக்கு வந்தால் விவசாயிகளுக்கு எத்தகைய பாதிப்பும் ஏற்பட விடமாட்டேன். சேதனப் பசளை மூலம் நெல்லை பயிரிடுவது குறித்து விவசாயிகளுக்கு படிப்படியாக பழக்கப்படுத்துவேன். உலகில் எந்த நாடும் நூற்றுக்கு நூறு வீதம் சேதனப் பசளையை பயன்படுத்தி விவசாயம் செய்வதில்லை.

நான் 1980 ஆம் ஆண்டுகளில் இருந்து விவசாயிகளுக்காக குரல் கொடுத்து வருகிறேன். விவசாயிகள் விசத்தை அருந்தி தற்கொலை செய்துகொள்ளும் சந்தர்ப்பத்தில், விவசாயிகளை காப்பாற்றுவதற்காக பொலன்நறுவை நகரில் ஆர்ப்பாட்டங்களை நடத்தி சவப் பெட்டிகளை கூட சுமந்திருக்கின்றேன் என அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply