மூன்று அமைச்சர்கள் வெளியிட்ட கருத்து தொடர்பில் நாமல் அதிருப்தி!

யுகதனவி மின் உற்பத்தி நிலையத்தை அமெரிக்க நிறுவனமொன்றுக்கு வழங்கும் செயற்பாட்டிற்கு எதிராக அரசாங்கத்தின் செயற்பாடு குறித்து மூன்று அமைச்சர்கள் வெளியிட்ட கருத்து தொடர்பில் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஸ அதிருப்தி வெளியிட்டுள்ளார்.

அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டு வரும் யுகதனவி மின் உற்பத்தி நிலைய ஒப்பந்தம் தொடர்பில் அமைச்சரவை பத்திரம் ஒன்று அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

இதன்போது, அமைச்சர்களின் கருத்துக்களை முன்வைப்பதற்கான சந்தரப்பம் வழங்கப்பட்டதாக அமைச்சர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

அரசாங்கத்துடன் இருந்து கொண்டு அரசாங்கத்திற்கு எதிராகவே சில அமைச்சர்கள் கருத்து வெளியிடுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அமைச்சரவையின் போது கருத்துக்களை முன்வைக்காமல் வெளியில் சென்று பேசுவது தவறு எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், அமைச்சர்களான வாசுதேவ நாணயக்கார, விமல் வீரவன்ச, உதய கம்மன்பில ஆகியோரே யுகதனவி மின் உற்பத்தி செயற்பாட்டுக்கு எதிராக கருத்து வெளியிட்டிருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

அரசாங்கத்தின் செயற்பாடுகளை அமைச்சர்களே விமர்ச்சிக்கும் நிலைமை காரணமாக உள்ளக முரண்பாடுகள் தீவிரம் அடைந்துள்ளன. இதன்காரணமாக விரைவில் அமைச்சரவையில் மாற்றங்கள் வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது எனவும் அரசியல் ஆய்வாளர்கள் கருத்து வெளியிட்டுள்ளனர்.

Leave a Reply