
நாடளாவிய ரீதியில் இன்றைய தினம் மூன்றாம் கட்ட தடுப்பூசி வழங்கும் பணிகள் ஆரம்பமாகின. இரண்டாம் கட்ட தடுப்பூசியைப் பெற்று 6 மாதங்கள் நிறைவடைந்தோருக்கு மூன்றாம் கட்ட தடுப்பூசி வழங்கப்பட்டன.
அதற்கமைய கொவிட்-19 ஒழிப்பு வேலைத்திட்டங்களை மேலும் வலுப்படுத்துவதற்காக சுகாதார அமைச்சினால் முன்னெடுக்கப்படுகின்ற தடுப்பூசி வழங்கும் வேலைத்திட்டத்திற்கமைய இராணுவத்தினருக்கு மூன்றாம் கட்ட தடுப்பூசி வழங்கும் பணிகள் இன்று திங்கட்கிழமை முன்னெடுக்கப்பட்டன.
இரண்டாம் கட்ட தடுப்பூசியைப் பெற்று 6 மாதங்கள் நிறைவடைந்துள்ள இராணுவத்தினருக்கு கொழும்பு – நாரஹேன்பிட்டவில் அமைந்துள்ள இராணுவ வைத்தியசாலையில் இந்த மூன்றாம் கட்ட தடுப்பூசி வழங்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டன.
இதன் போது இராணுவத்தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா இராணுவ வைத்தியசாலைக்கு விஜயம் செய்து தடுப்பூசி வழங்கும் பணிகள் தொடர்பில் நேரடியாக கண்காணித்தார்.
மூன்றாம் கட்ட தடுப்பூசி வழங்கலின் போது நோயாளர்களுடன் நேரடியாக நெருங்கிய சேவையை முன்னெடுக்கின்ற சுகாதார ஊழியர்கள், முப்படையினர் மற்றும் பொலிஸ் உள்ளிட்ட பாதுகாப்பு பிரிவினருக்கு முன்னுரிமையளிக்கப்படவுள்ளது.
அதனையடுத்து விமான நிலைய ஊழியர்கள் , சுற்றுலாத்துறை ஊழியர்களுக்கும், அதனைத் தொடர்ந்து 60 வயதுக்கு மேற்பட்டோருக்கும் மூன்றாம் கட்ட தடுப்பூசி வழங்கப்படும்.
அதற்கு அடுத்ததாக 30 – 60 வயதுக்கு இடைப்பட்டோரில் நாட்பட்ட நோய்களால் பாதிக்கப்பட்டவர்களும், பின்னர் இந்த வயது பிரிவைச் சேர்ந்த ஆரோக்கியமானவர்களுக்கும், இறுதியாக 20 வயதுக்கு மேற்பட்ட சகலருக்கும் பைசர் தடுப்பூசியை மூன்றாம் கட்டமாக வழங்கப்படவுள்ளது.





