
சந்தையில் நிலவும் அரிசி விலையுயர்வுக்கும் தீர்வு காணும் வகையில் இந்தியா, பாகிஸ்தான் மற்றும் மியன்மார் ஆகிய நாடுகளிலிருந்தும் அரிசி இறக்குமதி செய்யப்படுகின்றது என்று வர்த்தக அமைச்சு தெரிவித்துள்ளது.
கடந்த காலங்களில் சந்தையில் அரிசியின் விலை அதிகரித்துக் காணப்பட்டது. இதனையடுத்து அரிசிக்கான கட்டுப்பாட்டு விலை அறிவிக்கப்பட்டது. எனினும் அரிசித் தட்டுப்பாடு காரணமாக அது நீக்கப்பட்டது. இந்த நிலையில் சந்தையில் அரிசியின் விலை தொடர்ந்தும் அதிகரித்துக் காணப்படுகின்றது.
புறக்கோட்டை சந்தையில் ஒரு கிலோ நாட்டரிசி 140 ரூபாவுக்கும், ஒரு கிலோ சம்பா அரிசி 150 ரூபாவுக்கும், ஒரு கிலோ கீரிச்சம்பா அரிசி 220 ரூபாவுக்கும் விற்பனை செய்யப்படுகின்றது. அரிசி ஆலை உரிமையாளர்களால் புதிய விலை அறிவிக்கப்பட்டது. எனினும் குறித்த விலையை மீறி அதிக விலையில் சந்தையில் அரிசி விற்பனை செய்யப்படுகின்றது.
அதிகரித்த அரிசி விலையைக் கட்டுப்படுத்துவதற்காக அரசு இந்தியாவிலிருந்து ஒரு இலட்சம் மெற்றிக் தொன் அரிசியை கட்டம் கட்டமாக இறக்குமதி செய்வதற்கு நடவடிக்கை எடுத்துள்ளது.
இறக்குமதி செய்யப்படுகின்ற அரிசி சதொச ஊடாக விற்பனை செய்யப்படும். நுகர்வோரால் ஒரு சந்தர்ப்பத்தில் 5 கிலோ அரிசி மாத்திரமே கொள்வனவு செய்ய முடியும் என்று வர்த்தக அமைச்சு தெரிவித்துள்ளது.





