கடந்த சில நாட்களாக பெய்து வரும் மழை காரணமாக, கிளிநொச்சி மாவட்டத்தின் பல தாழ் நிலப் பகுதிகளில் வாழ்கின்ற மக்கள், பாதிப்புக்களை எதிர்நோக்கியுள்ளனர்.
வெள்ளத்தால், மக்கள் இடம்பெயர்ந்து செல்லும் நிலைமை ஏற்படவில்லை என, அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.
தொடர்ச்சியாக பெய்து வரும் மழை காரணமாக, தற்காலிக வீடுகளில் வசிக்கின்ற மக்கள், பெரும் நெருக்கடிகளுக்கு முகம் கொடுத்துளளனர். அவர்களது வீடுகளுக்குள்ளும், மழை வெள்ளம் புகுந்துள்ளது.
கடந்த காலத்தில், நிரந்தர வீட்டுத் திட்டங்களுக்கு உள்வாங்கப்பட்டு, ஆரம்ப கட்டக் கொடுப்பனவுகள் மட்டும் வழங்கப்பட்டு, மிகுதி கொடுப்பனவுகள் வழங்கப்படாது, வீட்டுத்திட்டத்தை பூர்த்தி செய்ய முடியாதுள்ள மக்கள், நெருக்கடிகளை சந்தித்துள்ளனர்.
இந்நிலையில், மாவட்டத்திலுள்ள குளங்களின் நீர் மட்டம், வெகுவாக அதிகரித்து வருகிறது. 10 அடி 6 அங்குலத்தை கொண்ட கனகாம்பிகைக்குளத்தில், 10 அடி 6.5 அங்குலத்திற்கு நீர் மட்டம் அதிகரித்தமையால், தற்போது வான் பாய ஆரம்பித்துள்ளது.
அதனையடுத்து, வெள்ளம் அனர்த்தம் ஏற்பட்டுள்ள பிரதேசங்களில், இராணுவத்தினர், மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையத்தினர், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.








