ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், அவரின் ஸ்கொட்லன்ட் வருகையை எதிர்த்தும் மாபெரும் கண்டன போராட்டம் ஒன்று இன்று புலம்பெயர் ஈழத்தமிழர்களால் கிளாஸ்கோவில் முன்னெடுக்கப்பட்டது.
2021 ஒக்ரோபர் 31 முதல் 2021 நவம்பர் 12 வரையில் கிளாஸ்கோவில் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் 2021 காலநிலை மாற்ற மாநாட்டில் கலந்துகொள்வதற்காக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச ஸ்கொட்லன் சென்றுள்ளார்.
அவரின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து புலம்பெயர் ஈழத்தமிழர்கள் பல்வேறு வழிகளில் எதிர்ப்பு நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர்.
அந்தவகையில், இன்று மாநாடு இடம்பெறும் வளாகத்துக்கு அண்மையில் மாபெரும் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.
போராட்டத்தில் ஈடுபட்டவர்கள், ராஜபக்ச ஒரு போர் குற்றவாளி, மனித உரிமைகளை மீறுபவர், இனப்படுகொலையாளியை கைது செய்ய வேண்டும், பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வேண்டும் என பல்வேறு கோசங்களை எழுப்பியிருந்தனர்.
இப் போராட்டத்தில் தமிழ் அமைப்புக்கள், சமூக செயற்பாட்டாளர்கள், பொதுமக்கள் எனப் பலர் கலந்துகொண்டு தமது எதிர்ப்பைத் தெரிவித்துள்ளனர்.










