சினிமாப் பாணியில் வேனைக் கடத்திச் சென்ற சம்பவமொன்று அட்டன் நகரில் இடம்பெறுள்ளது.
இச் சம்பவம் நேற்று இடம்பெறுள்ளதோடு, சம்பவத்துடன் தொடர்புடைய சாரதியை விசேட அதிரடிப்படையினர் அதிரடியாகக் கைது செய்துள்ளனர்.
அட்டன் நகரிலுள்ள தனியார் வங்கியின் ஏ.டி.எம் இயந்திரத்தில் வைபிலிடுவதற்காக, கண்டியிலிருந்து கொண்டுவரப்பட்ட 6 கோடி ரூபா பணமே இவ்வாறு கடத்தப்பட்டுள்ளது.
மேலும் தெரியவருகையில்,
குறித்த தனியார் நிறுவனமொன்றின் அதிகாரி, பாதுகாப்பு அதிகாரி மற்றும் சாரதி ஆகியோர் ஏ.டி.எம் இயந்திரத்தில் பணத்தை வைப்பிலிடுவதற்காக நேற்று மதியம் வருகை தந்துள்ளனர்.
அதிகாரியும், பாதுகாப்பு ஊழியரும் வேனியில் இருந்து இறங்கியகையோடு, சாரதி வேனை வேகமாக செலுத்திக்கொண்டு பணத்துடன் தப்பிச்சென்றுள்ளார்.
எனினும் நிறுவனத்தின் அதிகாரியும், பாதுகாப்பு ஊழியரும் அவரை பின்தொடர்ந்துள்ளனர்.
தலவாக்கலை – லிந்துலை வழியாக அம்பேவல பகுதிக்கு வேன் செல்வதை, தொழில்நுட்ப உதவியுடன் கண்டறிந்துள்ளனர்.
இது தொடர்பில் பொலிஸார் மற்றும் விசேட அதிரடி படையினருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து நுவரெலியா – கெப்பட்டிபொல ரேந்தபொல பகுதியில் வைத்து வேனை வழிமறித்து சாரதியை கைது செய்துள்ளனர்.
குறித்த சாரதியையும், குறித்த பணத்தொகையையும், வேனையும் கெப்பட்டிப்பொல பொலிஸ் நிலையத்தில் வைத்து அட்டன் பொலிஸ் நிலையத்திற்கு கையளித்துள்ளனர்.
சந்தேக நபரையும், பணத்தொகையையும் அட்டன் பொலிஸாரால் இன்று நீதிமன்றத்தில், முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாக நுவரெலியா விசேட அதிரடிப்படையினர் தெரிவித்தனர்.






