13ஆவது திருத்தச் சட்டத்தை மேம்படுத்துவது தொடர்பில், தமிழ்த் தேசியக் கட்சிகளுடன் தமிழ் முற்போக்கு கூட்டணி, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் என்பன யாழில் கலந்துரையாடல் ஒன்றை முன்னெடுத்துள்ளனர்.
13ஆவது திருத்தச் சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த இலங்கை அரசாங்கத்தை வலியுறுத்துமாறு இந்தியாவை கோருவது தொடர்பிலும், 13ஆவது திருத்தத்துக்கு மேலதிகமாக அதிகாரங்களை பெறுவதற்கான வழிவகைகள் குறித்து ஆராய்வதற்காகவும், இன்று யாழ்ப்பாணத்தில் கலந்துரையாடல் இடம்பெறுள்ளது.
யாழ்ப்பாணத்திலுள்ள தனியார் விடுதியொன்றில் இக்கூட்டத்தை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளில் ஒன்றான தமிழீழ விடுதலை இயக்கம் ஏற்பாடு செய்துள்ளது.
தமிழ் மக்கள் கூட்டணி, தமிழீழ மக்கள் விடுதலை கழகம், ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி, ஏனைய தமிழ்த் தேசியக் கட்சிகளின் தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகள் இந்தக் கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.
எனினும், இந்தக் கூட்டத்தில் இலங்கை தமிழ் அரசு கட்சி பங்கேற்காது என அறிவித்துள்ளது.
இக் கூட்டத்தில் தமிழ் முற்போக்கு கூட்டணியின் சார்பில் அதன் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் ஆகியோர் பங்கேற்றுள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.






