தமிழ் கட்சிகளின் ஒன்று கூடலை தமிழரசு கட்சி புறக்கணிக்கவில்லை என தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணம் திண்ணையில் உள்ள தனியார் விருந்தினர் விடுதியொன்றில் தமிழீழ விடுதலை இயக்கத்தின் ஏற்பாட்டில் தமிழ் கட்சிகளின் தலைவர்களுக்கிடையிலான கலந்துரையாடல் ஒன்று தற்போது நடைபெற்று வருகிறது.
இக் கூட்டத்தில், இலங்கைத் தமிழரசு கட்சி மற்றும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி ஆகிய கட்சிகள் கலந்து கொள்ளாத நிலையில், இது குறித்து மாவை சேனாதிராசா தெரிவிக்கையில்,
இன்று கூட்டத்தை தமிழரசுக் கட்சி ஒத்தி வைக்குமாறு கோரியிருந்தது. எனினும், எமது கோரிக்கை ஏற்றுக் கொள்ளப்படவில்லை. இதன் காரணமாக இன்றைய கூட்டத்தில் எம்மால் கலந்துகொள்ள முடியவில்லை.
எனினும், நாங்கள் தமிழ் மக்களின் அரசியல் நலன்சார்ந்து எப்போதும் இணைந்து பயணிக்கத் தயாராகவே இருக்கிறோம். கூட்டத்தை புறக்கணிக்கும் நோக்கம் தமிழரசுக் கட்சிக்குக் கிடையாது.
இக்கூட்டத்தில் எடுக்கப்படும் தீர்மானங்களை அடுத்து, தமிழ் அரசுக் கட்சி தனது பதிலை விரைவில் முன்வைக்கும். இதேவேளை, இலங்கை அரசாங்கம் புதிய அரசமைப்புக்கான வரைபை முன்வைக்கவுள்ளதாக அறிவித்துள்ளது.
இந்த நிலையில், இது குறித்து அனைத்து கட்சிகளுடனும் இணைந்து நாங்கள் பயணிக்கத் தயாராக இருக்கிறோம். கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தனும் இந்திய துணைத்தூதுவருடனான சந்திப்பில் இது தொடர்பில் பேசியிருக்கிறார் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.






