மக்களுக்கு இம்முறையும் கறுப்பு தீபாவளி தான்! ராஜாராம் தெரிவிப்பு

பொருட்களின் விலைகளும் உச்சம் தொட்டுள்ளன. இதனால் நிம்மதியாக வாழமுடியாத நிலைமை மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு ஏற்பட்டுள்ளது. இதனால், எமது மக்களுக்கு இம்முறையும் கறுப்பு தீபாவளிதான் என மலையக மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளரும், மத்திய மாகாணசபையின் முன்னாள் உறுப்பினருமான ராஜாராம் தெரிவித்தார்.

தலவாக்கலையில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

மேலும், மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு நாட் சம்பளமாக ஆயிரம் ரூபா வழங்கப்படும் எனக் கூறப்பட்டாலும் அது வழங்கப்படுவதில்லை. தொழில் சுமைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. தோட்ட நிர்வாகங்களின் கெடுபிடிகள் அதிகரித்துள்ளன. அடக்குமுறைகளும் கட்டவிழ்த்துவிடப்பட்டு வருகின்றன.

இதற்கிடையில், நாளாந்தம் பொருட்களின் விலைகளும் அதிகரித்துவருகின்றன. இதனால் நிம்மதியாக வாழமுடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இம்முறை தீபாவளி கூட கறுப்பு தீபாவளியாகவே அமையப்போகின்றது.

தோட்டத் தொழிலாளர்களுக்கு எதிராக நரகாசூரனைவிடவும் மோசமான சம்பவங்கள் அரங்கேற்றப்பட்டு வருகின்றன என்பது வேதனைக்குரிய விடயமாகும்.

இந்த அரசாங்கத்தின்கீழ் தேசிய வளங்கள் விற்கப்படுகின்றன. இன்று இளைஞர்கள் வெளிநாடுகளை நோக்கி படையெடுக்கும் நிலைமை உருவாகியுள்ளது.

அதேவேளை, கடந்த மாகாணசபைத் தேர்தலில் மண்வெட்டி சின்னத்தில் போட்டியிட்டு வெற்றிபெற்றேன். கட்சி அனுமதி வழங்கினால் இம்முறையும் போட்டியிடுவேன். அந்த அனுமதி கிடைக்கும் என நம்புகின்றேன். கட்சிக்காக மிகவும் அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருகின்றேன் என அவர் தெரிவித்தார்.

Leave a Reply