“கால்வாயில் குளிக்கும் போது தண்ணீரில்
மூழ்கி மூச்சு திணறல் ஏற்பட்டு மரணம் “

மருதமுனையை சேர்ந்த சுலைமான் லெப்பை சராப்கான்- வயது 21 என்பவரின் மரணம் கால்வாயில் குளிக்க சென்றபோது நீரில் மூழ்கியதால் மூச்சு திணறல் ஏற்பட்டு நேர்ந்தது என்று கல்முனைப்பற்று திடீர் மரண விசாரணை அதிகாரி இப்ராஹிம் நஸ்ரூல் இஸ்லாம் தீர்ப்பு வழங்கினார்.

மரணத்தில் இவருக்கு சந்தேகம் ஏற்படவில்லை என்பதால் உடல் கூற்று பரிசோதனைக்கு உட்படுத்தாமலேயே உடலத்தை குடும்பத்தினரிடம் ஒப்படைத்தார்.

பல்கலைக்கழகத்துக்கு தெரிவான மருதமுனையை சேர்ந்த நான்கு நண்பர்கள் கடந்த 31 ஆம் திகதி மாலை 5.00 மணி அளவில் வீடுகளில் இருந்து புறப்பட்டு குளிப்பதற்காக மத்தியமுகாம் பிரதேசத்தில் நீர்ப்பாசன திணைக்களத்துக்கு உட்பட்ட எச் கால்வாயை வந்தடைந்தனர். ஆனால் இவர்களுக்கு நீச்சல் தெரியாது.

கால்வாய் 05 படி கட்டுகளையும் 04 துருசுகளையும் கொண்டது. இவர் முன்னதாக சென்றார். 05 ஆவது படியை தாண்டி ஆழத்தை அறியாமல் காலை வைத்தார். தண்ணீர் திறக்கப்பட்டு இருந்ததை அறிந்திருக்கவில்லை. காப்பாற்றுங்கள், காப்பாற்றுங்கள் என்று கத்தினார்.

நண்பர்கள் விரைந்து பெற்றோர் நிரப்பு நிலையம் வரை சென்று நீச்சல் தெரிந்த ஒருவரை அழைத்து வந்தனர். வழியால் வந்த நீச்சல் தெரிந்த ஒருவரும் தண்ணீருக்குள் குதித்து இருவருமாக இளைஞனை தேடினர். ஆயினும் கண்டு பிடிக்க முடியவில்லை.

பின்னர் நீர்ப்பாசன உத்தியோகத்தர் அவசரமாக அழைத்து வரப்பட்டு துருசை நிறுத்தினார். மீண்டும் தேடியபோது 15 நிமிடங்களின் பின் தேடிய ஒருவரின் காலில் இளைஞனின் பாதம் பட்டது. மீட்டு வெளியே கொண்டு வந்தனர்.

இதனிடையில் மத்தியமுகாம் பொலிஸ் நிலைய பொலிஸாரும் சம்பவத்தை கேள்விப்பட்டு அவ்விடத்துக்கு வந்தனர். உடலில் அசைவு இருப்பது போல தோன்றியது. பொலிஸார் முதலுதவி வழங்கினர். முன்னேற்றம் இருக்கவில்லை. மத்தியமுகாம் மாவட்ட வைத்தியசாலைக்கு ஜீப்பில் கொண்டு சென்றனர்.

இவருக்கு அங்கு அரை மணித்தியாலம் முதலுதவி சிகிச்சை வழங்கப்பட்டது. அதிர்ச்சி வைத்தியமும் மேற்கொண்டனர். இருப்பினும் காப்பாற்ற முடியவில்லை. மரண விசாரணை அதிகாரிக்கு இரவு 9.30 மணி அளவில் பொலிஸாரின் தகவல் கிடைத்தது. உடனடியாக பொலிஸ் நிலையம் சென்றார். அங்கு இளைஞனின் மூன்று நண்பர்களின் வாக்குமூலங்களை பொலிஸார் பதிவு செய்வதை கண்டார்.

பின் பொலிஸாருடன் சம்பவ இடத்துக்கு சென்று பார்வையிட்டார். பின் வைத்தியசாலைக்கு சென்றார். மத்தியமுகாம் மாவட்ட வைத்தியசாலையில் பிரேத அறையோ, குளிரூட்டியோ கிடையாது என்பதால் உடலத்தை கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்குமாறு உத்தரவிட்டார். நள்ளிரவு 12.30 மணி அளவில் உடலம் அஷ்ரப் வைத்தியசாலையால் பொறுப்பேற்கப்பட்டது.

மரண விசாரணை அதிகாரி மறுநாள் 9.00 மணி அளவில் இவ்வைத்தியசாலைக்கு வந்து இறந்தவரின் தாய், குளிப்பதற்கு இளைஞனுடன் கூடவே சென்றிருந்த மூன்று நண்பர்கள், இம்மூன்று நண்பர்களின் தந்தைமார் ஆகியோரின் வாக்குமூலங்களை பதிவு செய்தார்.

இவருக்கு மரணத்தில் சந்தேகம் ஏற்படாததால் உடல் கூற்று பரிசோதனைக்கு உத்தரவிடாமலேயே உடலத்தை இறந்தவரின் சகோதரனிடம் மதியம் 2.00 மணி அளவில் ஒப்படைத்தார்.

இளைஞன் இரு ஆண் பிள்ளைகளை கொண்ட குடும்பத்தில் மூத்தவர். மௌலவியும் ஆவார். எந்தவொரு தீய பழக்கமும் இல்லாதவர். இவரின் சகோதரனுக்கு 19 வயது. தந்தை 10 மாதங்களுக்கு முன்புதான் இறந்திருந்தார். அம்மா குடும்ப பெண் ஆவார்.

Leave a Reply