13 ஆவது திருத்தச் சட்டத்தை அதன் ஆரம்ப நிலையில் இருந்தவாறு முழுமையாக அமுல்படுத்துவதற்கு இந்தியா காலதாமதம் எதுவும் இன்றி உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஒருமித்த நிலைப்பாட்டில் உள்ள தமிழ் தேசிய கட்சிகளின் இணைந்து கோரிக்கை விடுப்பதாக தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவர் க.வி.விக்னேஸ்வர் தெரிவித்துள்ளார்.
இன்று நடைபெற்ற தமிழ் பேசும் மக்களின் கட்சிக் கூட்டத்திற்கு நீதியரசர் க.வி.விக்னேஸ்வரால் சுகயீனம் காரணமாக பங்குபற்ற முடியவில்லை. அதனால் அவர் சார்பாக பேராசிரியர் சிவநாதனால் கூட்டத்தில் முன்வைக்கப்பட்ட ஆவணத்தில் இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், இலங்கைத் தீவில் தமிழ் பேசும் மக்கள் ஒரு தேசம். வடக்கு கிழக்கு அவர்களின் மரபுவழி தாயகம். பராதீனப்படுத்தாத சுயநிர்ணய உரிமைக்கு அவர்கள் உரித்துடையவர்கள் என்பவை ஏற்றுக் கொள்ளப்பட்டு, இணைந்த வடக்கு கிழக்கில் உயர்ந்தபட்ச சமஸ்டி அதிகார கட்டமைப்பு ஒன்றின் கீழ் ஏற்படுத்தப்படும் அதிகார பகிர்வே தேசிய இனப்பிரச்சினைக்கான நிலையான தீர்வாகும்.
சுமஸ்டி கட்டமைப்பின் கீழ் இத்தகைய ஒரு நிலையான தீர்வை ஏற்படுத்துவதற்கு இந்தியா எல்லாவிதமான முன்னெடுப்புக்களையும் மேற்கொள்ள வேண்டும் என்று நாம் கோரிக்கை விடுக்கின்றோம்.
அதேவேளை, குறுகிய அரசியல் இலாபம், தூர நோக்கற்ற சிந்தனை மற்றும் கடும் பௌத்த இனவாத சிந்தனை ஆகியவற்றின் அடிப்படையிலான அரசாங்கத்தின் செயற்பாடுகள் காரணமாக நாட்டில் இன்று ஏற்பட்டுள்ள ஆபத்துக்களை கவனத்தில் கொண்டும், வடக்கு கிழக்கில் யுத்தத்தால் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ள, தமிழ் பேசும் மக்களின் அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்யும் விதமாகவும், நிலங்கள் ஆக்கிரமிக்கப்பட்டு சிங்கள குடியேற்றங்கள் மேற்கொள்ளப்படுவதை தடுப்பதற்கும், அரசியல் அமைப்பில் ஏற்கனவே இருக்கின்ற 13 ஆவது திருத்தச் சட்டத்தை அதன் ஆரம்ப நிலையில் இருந்தவாறு முழுமையாக அமுல்படுத்துவதற்கு இந்தியா காலதாமதம் எதுவும் இன்றி உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நாம் கோரிக்கை விடுக்கின்றோம்.
இலங்கையில் தமிழ் பேசும் மக்களின் பாதுகாப்பு மற்றும் அரசியல் பொருளாதார மற்றும் கலாசார அபிலாசைகளை உறுதிப்படுத்துவதற்கு இந்தியாவுக்கு இருக்கும் தார்மீக ரீதியான கடமையையும் பொறுப்பையும் நாம் வலியுறுத்துவதுடன், அதனடிப்படையில் உடனடியாக தலையீட்டை மேற்கொள்ள வேண்டும் என தமிழ் பேசும் மக்களின் சார்பாக வேண்டுகோள் விடுக்கின்றோம்.
தற்போதைய நிலைமையில் மலையக மக்களும் முஸ்லீம் மக்களும் வாழும் இடங்களில் மாகாணசபைகளை உடனே ஏற்படுத்த வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கின்றோம்.
மேலும், இந்தியாவிடம் கோரிக்கை விடுக்கும் கடிதம் இதுவரையில் தயாரிக்கப்படவில்லை எனவும், கொழும்பில் இம்மாதம் 8 ஆம் திகதி பல கட்சிக் கூட்டம் நடைபெறும் போது இது கவனத்திற்கு எடுக்கப்படும் எனவும் அக் கடித்தில்; தெரிவிக்கப்பட்டுள்ளது.






