ஹோட்டல் ஒன்றின் உரிமையாளருடன் இடம்பெற்ற மோதலில், இளைஞர் ஒருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
இச்சம்பவம், காலி பத்தேகம நகொடவில் நேற்று செவ்வாய்க்கிழமை (2) இடம்பெற்றுள்ளது.
குறித்த ஹோட்டலில் கொத்துரொட்டி வாங்குவதற்காக சென்ற 26 வயது இளைஞர் ஒருவரே படுகொலை செய்யப்பட்டுள்ளதாக, பத்தேகம பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும் தெரியவருகையில்,
பத்தேகம நாகொட பிரதேசத்திலுள்ள ஹோட்டலொன்றுக்கு கொத்துரொட்டி வாங்குவதற்காக நேற்று இரவு 11.30 மணியளவில் இளைஞர் ஒருவர்சென்றுள்ளார்.
இதன்போது குறித்த இளைஞருக்கும் ஹோட்டல் உரிமையாளருக்கும் இடையில் வாய்த்தர்க்கம் ஏற்பட்டுள்ளது.
இதனையடுத்து ஆத்திரத்தில் ஹோட்டலிலிருந்து வெளியேறிய இளைஞர், தனது வீட்டுக்கு சென்று ஆயுதமொன்றை எடுத்துவந்து ஹோட்டல் உரிமையாளரை தாக்கியுள்ளார்.
இதனையடுத்து ஹோட்டல் உரிமையாளரும் அவரது மகனும் இணைந்து குறித்த இளைஞன் மீது தாக்குதலை மேற்கொண்டுள்ளனர்.
தாக்குதலில் குறித்த இளைஞர் மரணமடைந்தார்.
அத்துடன் தாக்குதலில் காயமடைந்த ஹோட்டல் உரிமையாளர், கராப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்த சம்பவத்தையடுத்து ஹோட்டல் உரிமையாளரின் மகனை கைதுசெய்துள்ள பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.






