யாழ்ப்பாணம், கச்சேரி, ஆளுநர் செயலக முன்றலில் மருத்துவ நியமனம் வழங்கக் கோரி, ஆயுர்வேத வேலையற்ற பட்டதாரி மருத்துவர்கள் சங்கம் பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்றை இன்று முன்னெடுத்துள்ளது.
ஆர்ப்பாட்டத்தில் அரச சித்த மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் தலைவர் கருத்துத் தெரிவிக்கையில்,
பட்டதாரி வைத்தியர்கள் அரச வேலைப்பாய்ப்பை கேட்டு வீதிக்கு வந்து போராட வேண்டிய நிர்ப்பந்தம் தற்போது ஏற்பட்டுள்ளது.
ஆறு வருடங்களுக்கு மேல் பல்கலைக்கழகத்தில் சித்த மருத்துவ பட்டப்படிப்பை பூர்த்தி செய்த பின்னரும் மேலதிகமா ஐந்து, ஆறு வருடங்களாக காத்திருப்பது மிகவும் வேதனைக்குரிய விடமாகும்.
ஜனாதிபதி சித்த மருத்துவம் தொடர்பான விடயங்களில் கவனம் செலுத்துமாறு கேட்டுக்கொள்கின்றோம். தற்போது இயற்கைப் பசளை தொடர்பான விடயங்களில் கவனம் செலுத்தும் ஜனாதிபதி, ஆயுர்வேத பட்டத்தாரிகளை இணைக்கும் போது கொரோனாத் தொற்றின் கட்டுப்பாடுகளை செய்ய இலகுவாக இருக்கும்.
ஆகவே, ஆயுர்வேத பட்டத்தாரிகளுக்கு உடனடியாக வேலைவாய்ப்புக்களை வழங்க ஜனாதிபதி தலைமையிலான குழு ஆவணம் செய்ய வேண்டும் எனக் கேட்டுக்கொள்வதாகத் தெரிவித்துள்ளார்.
மேலும், ஆர்ப்பாட்டக்காரர்கள் தெரிவிக்கையில்,
கடந்த நான்கு, ஐந்து வருடங்களாக சுமார் 795 வைத்தியர்களும், இம்மாத இறுதியில் சுமார் 1,000 வைத்தியர்களும் வேலைவாய்ப்பின்றி வெளியேறியுள்ளனர். அரசாங்கம் இன்னும் எமக்கான வேலைவாய்ப்பை பெற்றுத்தராததற்காக காரணம் எமக்குத் தெரியவில்லை.
இதுதொடர்பில், பல முறைகள் பேச்சுவார்த்தை நடத்தியும், உயர் அதிகாரிகளுக்குத் தெரியப்படுத்தியும் எவ்வித சாதகமான முடிவுகளும் எங்களுக்குக் கிடைக்கவில்லை.
20 மில்லியன் சனத்தொகைக்கு 2000 சுதேச வைத்தியர்கள் மட்டுமே சேவையில் உள்ளனர். தற்போது நிலவும் கொரோனாத் தொற்று காலப்பதியில் பாரிய வரவேற்பை மக்களிடம் இருந்து ஆயுர்வேத வைத்தியம் பெற்றிருக்கின்றது. மக்கள் எமது துறையை அதிகளவில் நாடி வருகின்றனர். இச் சிகிச்சை மூலம் அநேகமான நோயாளிகள் குணமடைந்துள்ளனர்.
ஆகவே, நாங்கள் இனி எவ்வித பேச்சுவார்த்தைக்கும் இடமளிக்கப்போவதில்லை எனவும், நிரந்தர வேலைவாய்ப்பு கிடைக்கும் வரை நாட்டின் பல இடங்களில், பாரிய ஆரப்பாட்டங்கள் தொடரும் எனவும் மனவருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கின்றோம். என்றனர்.
இதுதொடர்பில், மகஜர் ஒன்றும் வடமாகாண ஆளுநர் அலுவலகத்தில் கையளிக்கப்பட்டுள்ளது.









