பாண்டிருப்பில் மரங்கள், வீதிகள் கடலுக்குள் இழுத்து செல்லப்படும் அவலம்!

கல்முனை மாநகர சபைக்குட்பட்ட பாண்டிருப்பு பகுதியில் உள்ள வீதிகள் கடலரிப்பு காரணமாக கடலுக்குள் இழுத்து செல்லப்படும் நிலையில் காணப்படுகிறது.

கடந்த சில நாட்களாக ஏற்பட்ட கடலரிப்பினால் பாண்டிருப்பு கடற்கரை பிரதேசத்தில் மரங்கள் வீழ்ந்த நிலையில், புதிதாக நிர்மாணிக்கபட்டிருந்த வீதிகளின் ஒரு பகுதி முற்றாக இடிந்து கடலுக்குள் வீழ்ந்துள்ளது.

இதனால் அப்பகுதியில் போக்குவரத்து செய்வதில் மக்கள் சிரமங்களை எதிர்கொண்டுள்ளனர்.

குறித்த கடலரிப்பின் தாக்கம் தொடர்பாக அப்பகுதி சமூக ஆர்வலர் தாமோதரம் பிரதீவன் கல்முனை வடக்கு பிரதேச செயலாளர் மற்றும் கரையோர பாதுகாப்பு பிரிவினருடன் உரையாடி நடவடிக்கை எடுத்துள்ளதாக ஊடகங்களிடம் குறிப்பிட்டார்.

இந்த விடயம் தொடர்பாக மாவட்ட மேலதிக அரச அதிபர் மற்றும் ஏனைய அதிகாரிகளுடனும் பேசியுள்ளதாகவும் இந்த விடயம் தொடர்பில் மிகுந்த அவதானத்துடன் இருப்பதாகவும் மேலும் கூறியுள்ளார்.

அதேவேளை, அம்பாறை மாவட்டத்தின் கரையோரப் பிரதேசங்களில் தீவிரமடைந்து வரும் கடலரிப்பின் காரணமாக பல நூற்றுக்கணக்கான ஏக்கர் நிலங்களை மக்கள் இழந்து வருவதோடு அங்குள்ள மீனவர்களும் தொழில் நடவடிக்கைகளில் பெரிய இடர்களை எதிர்கொண்டு வருவதாக கவலை தெரிவிக்கின்றனர்.

குறிப்பாக அம்பாறை மாவட்டத்தில் ஒலுவில் தொடங்கி நிந்தவூர் ,காரைதீவு வரையிலான பகுதிகளில் ஏற்பட்டுள்ள கடலரிப்பின் காரணமாக 400 மீட்டர் வரையிலான நிலப்பகுதிக்குள் கடல் புகுந்துள்ளது.

கடந்த சில தினங்களாக கடல் அரிப்பு ஏற்பட்டு வருகின்றமையினால் மீனவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

காரைதீவு- நிந்தவூர் கரையோரப் பிரதேசத்தில் கடந்த சில தினங்களாக கடல் அரிப்பு அதிகரித்துவருகின்றமையினை தடுக்க நிரந்தரமாக கடல் அரிப்பை தடுக்க நடவடிக்கை முன்னெடுக்க பல்வேறு தரப்பினர் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

எனினும் குறித்த கடல் அரிப்பினால் மீன்பிடி வாடிகள், பாதிப்புற்று கடல் ஊடறுத்து செல்லுவதனால் கரையோரத்திலுள்ள தென்னை மரங்களும் அழித்து விடும் அபாய நிலைமை ஏற்பட்டு வருகின்றதுடன் மீன்பிடி தொழில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக மீனவர்கள் தெரிவிக்கின்றனர்.

இவ்விடயத்தில் சம்மந்தப்பட்ட உயர் அதிகாரிகள் நிரந்தர தீர்வு கிடைக்கும் வேலைத்திட்டம் ஒன்றினை நடைமுறைப்படுத்த வேண்டும் என மீனவ சமூகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

Leave a Reply