மன்னாரில் வெள்ளம் ஏற்பட்டுள்ள பிரதேசங்களை பார்வையிட்டார் மாவட்ட அரச அதிபர்!

மன்னாரில் வெள்ளம் ஏற்பட்டுள்ள பிரதேசங்களை, மன்னார் மாவட்ட அரச அதிபர் ஏ.ஸ்ரன்லி டிமெல் இன்று நேரில் சென்று பார்வையிட்டுள்ளார்.

மன்னார் மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக பெய்து வரும் கடும் மழை காரணமாக மாவட்டத்தின் பல பாகங்களிலும் வெள்ளம் ஏற்பட்டுள்ளதால் மக்களின் இயல்பு நிலை பாதிக்கப்பட்டுள்ளது.

மன்னார் மூர் வீதி, உப்புக்குளம், பள்ளிமுனை, சாந்திபுரம், சௌத்பார் பனங்கட்டுகொட்டு, எமில் நகர் உள்ளிட்ட பல கிராமங்களில் உள்ள பல வீடுகளில் மழை நீர் சூழ்ந்துள்ளது.

தலைமன்னார் ஊர்மனை கிராமத்தின் வடக்கு மற்றும் தெற்கு கிராம அலுவலர் பிரிவுகளில் மழை வெள்ளத்தால் சுமார் 50 குடும்பங்கள் வரை பாதிக்கப்பட்டுள்ளது.

மழைநீர் தமது வீட்டிற்குள் புகுந்த நிலையில் குறித்த குடும்பங்கள் தங்களுடைய உறவினர்கள் மற்றும் நண்பர்களின் வீடுகளில் தஞ்சமடைந்துள்ளனர்.

இந்நிலையில், இன்று மன்னார் மாவட்ட அரச அதிபர் ஏ.ஸ்ரன்லி டிமெல், மன்னார் பிரதேச செயலாளர் எம். பிரதீப் மற்றும் கிராம சேவையாளர் ஆகியோர் குறித்த பகுதிக்குச் சென்று பார்வையிட்டனர்.

மேலும், இப் பகுதியில் தேங்கியுள்ள வெள்ள நீரை நாளை வெளியேற்றுவதற்கான நடவடிக்கையை கிராம மக்களுடன் இணைந்து மேற்கொள்ள நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

Leave a Reply