புத்தளம், வேப்பமடு அரச மத்திய மருந்தக வைத்தியசாலையில் கடந்த 2 மாதங்களுக்கு மேலாக வைத்தியர் இல்லாமையால், பெரும் அசௌகரியங்களுக்கு உள்ளாகி வருவதாக அப்பகுதி மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.
முன்னர் இருந்த வைத்தியர் விடுமுறையில் சென்றமையின் காரணமாக குறித்த வைத்தியசாலைக்கு 2 மாதங்களாக இதுவரை ஒரு வைத்தியரைக் கூட நியமிக்கவில்லை.
குறித்த வைத்தியசாலையில் கங்காணி மாத்திரம் இருப்பதாகவும், வைத்தியர் இல்லாமையால் மருந்துகளைப் பெற முடியாமல் இருப்பதாக கிராம மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.
வேப்பமடு கிராமத்திலிருந்து, புத்தளம் தள வைத்தியசாலைக்குச் செல்வதென்றால், 8 கிலோமீற்றர் தூரம் செல்ல வேண்டி உள்ளதாகவும், முச்சக்கர வண்டியில் செல்ல வேண்டுமென்றால் 400 ரூபா வரை செலவாகிறது எனவும் மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
இதனால், குறித்த வைத்தியசாலைக்கு உரிய வைத்தியர் ஒருவரை நியமித்து தருமாறு மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.








