12.5 கிலோ கிராம் நிறையுடைய லாப் எரிவாயு சிலிண்டரின் விலையை 4000 ரூபா வரை அதிகரிப்பதே லாப் எரிவாயு விநியோக நிறுவனத்தின் நோக்கம் என நுகர்வோர் உரிமைகளைப் பாதுகாக்கும் தேசிய அமைப்பின் தலைவர் ரஞ்சித் விதானகே தெரிவித்துள்ளார்.
நுகர்வோர் உரிமைகளைப் பாதுகாக்கும் தேசிய அமைப்பின் அலுவலகத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
மேலும், நாட்டில் லாப் சிலின்டரை பெற்றுக் கொள்வதில் நுகர்வோர் பெரும் நெருக்கடிகளை எதிர்கொண்டு வரும் நிலையில் ஒரு சில பிரதேசங்களில் லிட்ரோ சமையல் எரிவாயு சிலிண்டர் விநியோகத்தில் தட்டுப்பாடு காணப்படுகிறது.
எனினும், லிட்ரோ சிலிண்டர் எதிர்வரும் வாரம் முதல் தட்டுப்பாடின்றி விநியோகிக்கப்படும் என அந்நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
லாப்; எரிவாயுவின் விலை கடந்த காலங்களில் தொடர்ச்சியாக அதிகரிக்கப்பட்டவாறு உள்ள நிலையில் மீண்டும் விலையை அதிகரிக்க லாப் நிறுவனத்தினர் நுகர்வோர் அதிகார சபையிடம் வலியுறுத்தியுள்ளனர்.
அத்தோடு, விற்பனை விலையை கட்டம் கட்டமாக 4,000 ரூபா வரை அதிகரிக்க லாப் நிறுவனத்தினர் திட்டமிட்டுள்ளது.
அரசாங்கத்தின் அனுமதி இல்லாமல் சமையல் எரிவாயுவின் விலையை அதிகரிக்கும் நிலை தற்போது காணப்படுவதாவும், அதன் காரணமாகவே லாப் நிறுவனம் சிலிண்டர் விநியோகத்தை மட்டுப்படுத்தியுள்ளது.
இவ்வாறான சூழ்நிலையில் தற்போது 8 பிரதான அத்தியாவசியப் பொருட்களுக்கான கட்டுப்பாட்டு விலை இரத்து செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், அத்தியாசிய பொருட்களின் விலை நியாயமற்ற வகையில் அதிகரிக்கப்பட்டுள்ளமைக்கு எதிர்க்கட்சியும் பொறுப்பு கூற வேண்டும். ஏனெனில் நாட்டில் தற்போது பலமான எதிர்க்கட்சியொன்று இல்லை.
இதேவேளை, அரிசி இல்லாவிடின் மரவள்ளிக்கிழங்கை உண்ணுங்கள் என அமைச்சர் சமல் ராஜபக்ஸ கூறியுள்ளமை மக்கள் மீது அவர்கள் கொண்டுள்ள அக்கறையை வெளிப்படுத்தியுள்ளது.
நாட்டில் சமையல் எரிவாயு பிரச்சினை காரணமாக கொழும்பில் உள்ளவர்களுக்கு மரவள்ளிக்கிழங்கை கூட அவித்து உண்ண முடியாத நிலை விரைவில் ஏற்படும் என அவர் மேலும் தெரிவித்தார்.






