ஒரு நாடு ஒரு சட்டம் தொடர்பான ஜனாதிபதி செயலணிக்குழுவின் தலைவராக கலகொட அத்தே ஞானசார தேரர் நியமிமக்கப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து, அமைச்சர் பதவியை இராஜினாமா செய்வதாக கூறி, நீதியமைச்சர் அலி சப்ரி கையளித்த இராஜினாமா கடித்தை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச ஏற்க மறுத்துள்ளார்.
செயலணிக்குழுவின் தலைவராக ஞானசார தேரர் நியமிக்கப்பட்டமையை எதிர்த்து அலி சப்ரி, நாடாளுமன்ற உறுப்பினர் பதவி மற்றும் நீதியமைச்சர் பதவியில் இருந்து விலகும் கடிதத்தை ஜனாதிபதியிடம் நேற்று கையளித்திருந்தார்.
எனினும், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, அலி சப்ரியின் பதவி விலகல் கடிதத்தை ஏற்கவில்லை என அரசாங்கத்தின் தகவல்கள் கூறுகின்றன.
ஜனாதிபதியை சந்தித்த அமைச்சர் அலி சப்ரி, சட்டங்களை உருவாக்க நாட்டில் உரிய நடைமுறைகள் இருக்கும் போது, இப்படியான செயலணிக்குழுவின் மூலம் சட்டத்தை உருவாக்குவது தேவையற்ற பிரச்சினைகளை உருவாக்கும் எனவும், இந்த நியமனம் குறித்து தனக்கு தெளிவில்லை எனவும் நீதியமைச்சர், ஜனாதிபதியிடம் கூறியுள்ளார்.
இதன்போது கருத்து வெளியிட்டுள்ள ஜனாதிபதி, இந்த விடயம் தொடர்பில் தான் ஆலோசனைகளை பெற்றுக்கொள்ளவே ஜனாதிபதி செயலணிக்குழுவை நியமித்ததாகவும் வேறு விடயங்களுக்காக அல்ல எனவும் கூறியுள்ளார்.
அத்துடன், சட்டங்களை உருவாக்கும் போது கட்டாயம் நீதியமைச்சரின் பங்களிப்பை பெற்றுக்கொள்வதாகவும், அலி சப்ரியின் பணிகளை ஜனாதிபதி பாராட்டியுள்ளார்.
ஞானசார தேரரின் நியமனம் சம்பந்தமாக சிலர் தவறாக புரிந்துக்கொண்டுள்ளதாகவும், அந்த எண்ணத்தை சரி செய்ய உடனடியாக நடவடிக்கை எடுப்பதாகவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.






