கொட்டாஞ்சேனை கொள்ளை தொடர்பில் உளவுப் பிரிவு தகவல் சேகரிப்பு

கொட்டாஞ்சேனை,ஓக 11

கொட்டாஞ்சேனை, சென். பெனடிக் வீதியில்  கோடீஸ்வர  வர்த்தகரின் வீட்டுக்குள் அத்து மீறி கோடிக்கணக்கான ரூபா பெறுமதி கொண்ட பணம், நகைகளை ஆயுத முனையில் கொள்ளையிட்டதாக கூறப்படும் சம்பவத்துடன் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவருக்கும் தொடர்புகள் இருப்பதாக உளவுப் பிரிவினர்  உயர் பொலிஸ் அதிகாரிகளுக்கு அறிக்கையளித்துள்ளனர்.

கொட்டாஞ்சேனை பொலிஸ் நிலையத்தில்  முன்னர் சேவையாற்றியவரும் தற்போது அதனை அண்மித்த பொலிஸ் நிலையம் ஒன்றில் சேவையில் இருப்பதாகவும் கூறப்படும்  பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவருக்கு குறித்த கொள்ளையுடன் தொடர்புகள் இருப்பதாக  அறிக்கை அளிக்கப்பட்டிருப்பதாக அறிய முடிகிறது.

இந்நிலையில் இந்த விடயம் தொடர்பில் பொலிஸ் உயர் மட்டத்தின் அவதானம் திரும்பியுள்ளது. கொள்ளைக்காக குறித்த வீட்டுக்கு பொலிஸார் எனக் கூறிக் கொண்டு சென்றுள்ள இரு சந்தேக நபர்களும் கையில் வைத்திருந்ததாக கூறப்படும் கை விலங்கை குறித்த பொலிஸ் உத்தியோகத்தரே வழங்கியிருப்பதாக சந்தேகம் எழுந்துள்ள நிலையில், வர்த்தகரை விசாரிக்கும் முறை, கொள்ளையர்களின் உடை உள்ளிட்டவைகளும் அந்த பொலிஸ் உத்தியோகத்தரின் ஆலோசனையே என சந்தேகிக்கப்படுகின்றது.

இதனைவிட, கொள்ளையிடப்பட்ட வீட்டின் உரிமையாளரான  வர்த்தகரின் மனைவியின் இரு நண்பிகள் கொள்ளையை திட்டமிட்டதாக சந்தேகத்தில் கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ள பின்னணியில், உளவுத் துறையினர் வர்த்தகரின் மனைவி தொடர்பிலும் தகவல் சேகரித்துள்ளனர். அது குறித்த தகவல்களையும்  உளவுத் துறையினர் உயர் பொலிஸ் அதிகாரிகளுக்கு கையளித்துள்ளதாகவும் அறிய முடிகிறது.

Leave a Reply