இலங்கை அரசாங்கத்தின் மீது எங்களுக்கு நம்பிக்கை இல்லை-வேலன் சுவாமிகள் அதிருப்தி!

வடக்கு, கிழக்கு வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவுகளின் சங்கத்தினால் இன்றையதினம் மாபெரும் கவனயீர்ப்புப் போராட்டமொன்று கிளிநொச்சியில் இடம்பெற்றிருந்தது.

பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையிலான மக்கள் பேரெழுச்சி இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் வேலன் சுவாமிகள் சமூக ஊடகத்துக்கு கருத்து தெரிவித்திருந்தார்.

அவர் தெரிவித்திருந்ததாவது ;

வடக்கு,கிழக்கு காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தினர் தங்களுடைய போராட்டத்தினை ஆரம்பித்து 2000 நாட்களை அடைந்திருக்கிறது.

வடக்கு,கிழக்கு தமிழர் தாயகத்தில் உள்ள 8 மாவட்டங்களிலும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுடைய சங்கத்தினர் தங்களது தொடர் போராட்டங்களை பல்வேறு வடிவங்களில் ஒவ்வொரு காலக்கட்டத்திலும் வெளிப்படுத்தி வந்துகொண்டிருக்கிறார்கள்.

இறுதி யுத்தத்தில் கையளிக்கப்பட்ட உறவுகளுக்கு என்ன நடந்தது ? வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கு என்ன நடந்தது என்பது பற்றி இதுவரை எந்த முயற்சியும் இல்லை .ஓ.என்.பி அலுவலகமாக இருக்கட்டும் ,மரணச் சான்றிதழ் வழங்குவதாக இருக்கட்டும் ,இழப்பீடு வழங்குவதாக இருக்கட்டும் இவை எவையுமே எமக்கு வேண்டாம் .எங்களுக்கு நீதி தான் வேண்டும் .

இந்த உறவுகளுக்கு என்ன நடந்தது என்பது பற்றி சர்வதேச பொறிமுறை ஊடாக ஒரு விசாரணை நடாத்த வேண்டும் .அதனூடாக சர்வதேச நீதி நிலை நாட்டப்பட வேண்டும் ,இலங்கை அரசாங்கத்தின் மீது எங்களுக்கு நம்பிக்கை இல்லை .

கோட்டாபயராஜபக்ஷ ,மகிந்த ராஜபக்ஷ ,ரணில்விக்கிரமசிங்க என யார் ஆடசிக்கு வந்தாலும் தமிழர்களை அவர்கள் ஒரேவிதமாகத் தான் பார்க்கின்றார்கள் ,எங்களை அடக்கி ஆளுகின்றார்கள்.

சிங்கள,பௌத்த பேரினவாத நாடு என்பதை மீண்டும் மீண்டும் வலியுறுத்தி நிற்கிறார்கள்.எங்களுக்கு ஆடசி மாற்றத்தில் எள்ளளவும் நம்பிக்கை இல்லை .கட்டமைப்பு மாற்றத்திலும் நம்பிக்கை இல்லை .எனவே சர்வதேச நீதியினை வேண்டி நிற்கின்றோம் .என்றார்

Leave a Reply