மக்களின் வாழ்வாதார பிரச்சினைகளை கையாள்வதில் அரசு தோல்விக்கண்டுள்ளது! அரசின் சிரேஸ்ட உறுப்பினர்கள் எச்சரிக்கை

நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி மற்றும் மக்களின் வாழ்வாதார பிரச்சினைகளை கையாள்வதில் அரசு தோல்விக்கண்டுள்ளது. கொள்கைகளில் ஏற்பட்ட மாற்றமே இதற்குக் காரணம் என ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி தலைமையிலான அரசின் சிரேஸ்ட உறுப்பினர்களான அநுரபிரியதர்சன யாப்பா மற்றும் சுசில் பிரேமஜயந்த உள்ளிட்டவர்கள் விமர்சித்துள்ளனர்.

இது தொடர்பில் அவர்கள் ஊடகங்களிடம் மேலும் தெரிவித்ததாவது,

நாட்டில் பல்வேறு நெருக்கடிகள் ஏற்பட்டுள்ளன. தற்போதைய அரசின் மீது நம்பிக்கை வைத்து வாக்களித்த பொதுமக்கள் இன்று வெறுப்புடன் உள்ளனர். கொரோனாத் தொற்றால் இலங்கை மாத்திரமல்ல முழு உலக நாடுகளும் பாதிப்படைந்துள்ளன.

ஆனால், அந்த நாடுகள் பொருளாதார ரீதியில் மீள எழுவதற்காக மக்கள் மயப்பட்ட திட்டங்களை முன்னெடுத்து வருகின்றன. ஆனால், இலங்கை அவ்வாறில்லை. அநாவசியமான செயற்பாடுகளில் ஆர்வம் காட்டி வருகின்றது.

நாட்டு மக்கள் பொருளாதார ரீதியில் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அவர்களுக்கு உதவும் வகையில் எவ்விதமான திட்டங்களையோ, நம்பிக்கைகளையோ அரசு ஏற்படுத்தவில்லை.

இதனால், அரசு மீது மக்கள் முழு அளவில் நம்பிக்கை இழந்து வருகின்றனர். எனவே, அரசு நிலைமையை உணர வேண்டும். அத்தியாவசியப் பொருட்களின் விலைகளைக் கட்டுப்படுத்துவதிலும் அந்தப் பொருட்களைத் தட்டுப்பாடின்றி மக்களுக்கு வழங்குவதிலும் அரசு தோல்வி கண்டுள்ளது.

நாளுக்கு நாள் நிலைமை மோசமடைகின்றது. ஆனால், அரசு அந்நிய நாடுகளுக்குத் தேவையான விடயங்களை நாட்டில் முன்னெடுப்பதற்கான சூழலையே ஏற்படுத்துகின்றது.

தற்போதைய அமைச்சரவை முழு அளவில் தோல்வி கண்டுள்ளது. மிகவும் மோசமான நிலைமையிலேயே உள்ளோம். இதனால் ஆட்சியை முன்னெடுப்பதே நெருக்கடியாக உள்ளது.

அரசின் இயலாமை வெளிப்பட்டு மக்கள் மத்தியில் நம்பிக்கை இல்லாது போயுள்ளது. இதனால் ஆளும் கட்சி உறுப்பினர்கள் கூறுவதை மக்கள் நம்புவதில்லை. இந்த நிலைமை எதிர்வரும் தேர்தல்களில் பாரியளவில் தாக்கம் செலுத்தும்.

எனவே, தவறுகளை அவசரமாகத் திருத்திக்கொண்டு மக்கள் மயப்பட்ட ஆட்சியை முன்னெடுக்க வேண்டும். அவ்வாறு இல்லாவிட்டால் மாற்று அரசியல் சக்தி ஆட்சிப்பீடம் ஏறுவதைத் தவிர்க்க இயலாது.

தீர்மானங்கள் எடுக்கும் நிலைமையில் நாம் இல்லை. எனவே, தற்போது பொறுப்புகள் வழங்கப்பட்டாலும் அதனை ஏற்கப்போவதில்லை. மிகவும் கவலையுடன் மௌனித்துள்ளோம். ஆசியாவின் வறுமையான நாடு என்ற நிலைக்கு இலங்கை தள்ளப்படலாம்.

அரிசி தொடக்கம் எரிவாயு வரை அனைத்திலும் விலையேற்றமும் தட்டுப்பாடுமே உள்ளது. மறுபுறம் உரம் இல்லாது விவசாயிகள் போராட்டத்தில் ஈடுப்பட்டு வருகின்றனர். அரசின் இயலாமை வெளிப்பட்டு மக்கள் மத்தியில் நம்பிக்கை இல்லாது போயுள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.

Leave a Reply