திருகோணமலை மாவட்டம் தம்பலகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட முள்ளிப்பொத்தானை பகுதியில் புகையிரத வண்டி விபத்தில் இளம் குடும்பஸ்தர் ஸ்தலத்தில் பலியாகியுள்ளளார்.
குறித்த சம்பவம் நேற்று (07) மாலை இடம் பெற்றுள்ளது.
இவ்வாறு உயிரிழந்தவர் முள்ளிப்பொத்தானையை சேர்ந்த இளம் குடும்பஸ்தரான 21 வயதுடைய ஹமீட் முபீட் என தெரியவருகிறது.
இச் சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது.,
கொழும்பில் இருந்து திருகோணமலை நோக்கி பயணித்த புகையிரத வண்டியிலேயே இவ் விபத்து இடம் பெற்றுள்ளது.
விபத்துக்குள்ளான நபர், தொலைபேசியில் ஹெட்போன் அணிந்தவாறு பேசிக்கொண்டிருந்துள்ளார்.
சக நண்பர்கள் புகையிரதம் வருவதை அவதானித்து கூச்சலிட்டதாகவும் ஹெட்போன் அணிந்திருந்தமையினால் அவருக்கு சரியாக கேட்காத நிலையில், இருவரும் அவரை நோக்கி ஓடிய போதும் ரயில் வேகமாக அவரை மோதியதாகவும் சக நண்பர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும் விபத்துக்குள்ளானவரின் தலை துண்டிக்கபட்ட நிலையில் சடலம் கந்தளாய் பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அதன்பின் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
மேலும் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரனைகளை தம்பலகாமம் பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.






