ஒக்டோபர் மாதம் 14 ஆம் திகதி பருத்தித்துறை கடற்பரப்பில் இரு படகுகளில் 23 இந்திய மீனவர்கள் சிறை பிடிக்கப்பட்டனர். இவ்வாறு சிறை பிடிக்கப்பட்டவர்கள் விடயத்தில் பிரதமரின் இணைச் செயலாளர் செந்தில் தொண்டமான் அதிக கரிசணை செலுத்தி வந்துள்ளார்.
இது தொடர்பில், கொழும்பில் பல முயற்சிகளை மேற்கொண்டார். நேற்றுமுன்தினம் யாழ் சிறையில் அடைக்கப்பட்டுள்ள 23 இந்திய மீனவர்களையும் பார்வையிட்டார்.
இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட 23 இந்திய மீனவர்களும் நாகை மாவட்டம் என்பதனால் அதனை வைத்து தேடியபோது, செந்தில் தொண்டமானின் தாயாரின் உடன் பிறந்த சகோதரியும் ஆறுமுகம் தொண்டமானின் உடன் பிறந்த சகோதரியுமான ஒருவர் இந்தியாவின் நாகைபட்டிணத்திலேயே திருமணம் செய்தவர் என்ற உண்மை கண்டறியப்பட்டது.
அவ்வாறு சித்தி திருமணம் செய்த சித்தப்பாவின் சகோதர வழி நட்புக்களின் பிள்ளைகள் இருவர் இந்த 23 பேரில் உள்ளடக்கம் என தற்போது கண்டறியப்பட்டுள்ளது.
இதன் காரணமாகவே ஒக்டோபர் 14 ஆம் திகதி கைது செய்யப்பட்டு, 14 நாள் விளக்கமறியல் உத்தரவு பெறப்பட்டதன் பின்பு 28 ஆம் திகதி தவணைக்கு செந்தில் தொண்டமான் சட்டத்தரணி ஜோய்மகிழ் மகாதேவாவை ஏற்பாடு செய்திருந்தார்.
இதேதேரம், 23 மீனவர்கள் சார்பிலும் இந்தியத் தூதரகம் சுஜீபன் மற்றும் குகதாஸ் ஆகிய இரு சட்டத்தரணிகளையும் ஏற்பாடு செய்திருந்தனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ள 23 இந்திய மீனவர்களில் ஒருவர் தமிழகம் மண்டபம் அகதி முகாமில் தங்கியிருக்கும் திருகோணமலையைச் சேர்ந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.






