முத்துராஜவெல சதுப்பு நிலத்தின் சுமார் 5,800 ஹெக்டேர் நிலத்தை நகர அபிவிருத்தி அதிகார சபை, சுவீகரிப்பதற்காக வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை திரும்பப்பெறவேண்டும் என இராஜாங்க அமைச்சர் நிமல் லான்சா தெரிவித்துள்ளார்.
மேலும் பிரச்சினைக்கு உள்ளாக்காது, வர்த்தமானியை திரும்பப்பெறவேண்டும் என்று அவர் இன்று நாடாளுமன்றத்தில் கோரிக்கை விடுத்தார்.
மேலும், புதிய வர்த்தமானிக்குப் பதிலாக 2006 மற்றும் 2008ஆம் ஆண்டுகளில் வனவிலங்கு மற்றும் வனப் பாதுகாப்பு வலயமாக வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ள 1,447 ஹெக்டேயர்களை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
முத்துராஜவெல சுற்றாடல் உணர்திறன் வலயமாக 1,447 ஹெக்டேயர் காணிகளுக்கு மேலதிகமாக 4,400 ஹெக்டேயர் காணிகளை பிரகடனப்படுத்துவதற்கு முன்மொழியப்பட்டுள்ளது.
இந்தப் புதிய வர்த்தமானி அறிவித்தல் தொடர்பில் சமூகத்தில் சர்ச்சை ஏற்பட்டுள்ளதாக தெரிவித்த அமைச்சர், இந்த நடவடிக்கையின் மூலம் அரசாங்கம் மற்றுமொரு சிக்கலுக்குள் செல்வதாக தெரிவித்தார்.






