எமக்கு வாக்களித்தவர்களே எம்மை விரட்டியடிக்கிறார்கள்!

தற்போது, வீதியில் இறங்கி பயணிக்க முடியவில்லை, கிராமங்களில் நல்ல விடயத்துக்கோ துன்பியல் சம்பவங்களுக்கோ செல்ல முடியவில்லை. எமக்கு வாக்களித்த மக்களே எங்களை விரட்டியடிக்கின்றனர். – என்று, அமைச்சர் விமல் வீரவன்ச தலைமையிலான தேசிய சுதந்திர முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் நிமல் பியதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

பொருள்களின் விலையுயர்வு காரணமாக அரசுக்கு எதிரான போராட்டங்கள் நாடு முழுவதும் வலுப்பெற்றுவருகின்றன. குறிப்பாக விவசாளிகள் தீவிரமாக போராட்டத்தில் குதித்துள்ளனர். இந்தநிலையில், எதிர்க்கட்சியினரே போராட்டங்களில் ஈடுபடுகின்றனர், போராடுமாறு தூண்டுகின்றனர் என்று அரச தரப்பு ஒரு பிரிவு அமைச்சர்களும் எம்.பிக்களும் கூறிவருகின்றனர். இந்தநிலையில், அவற்றை மறுதலிக்கும் வகையில், உண்மையை உணர்த்தும் வகையில், அரச தரப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் நிமல் பியதிஸ்ஸ மேற்கண்டவாறு பகிரங்கமாகக் கூறியுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,

நுவரெலியா மாவட்டத்தில் ஆளும் கட்சி பிரதிநிதிகள் ஆடை அணிந்து கொண்டு வீதியில் இறங்கி செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்தநிலைமை நாட்டுத் தலைவர்களுக்கும் ஏற்படக்கூடும்.
விவசாயிகளின் போராட்டங்களில் எதிர்க்கட்சிகள் இருக்கின்றனர் என்று கூறப்படுவது முற்றிலும் பொய்யான விடயமே. வறுமை மற்றும் நெருக்கடிகள் காரணமாகவே அனைத்து விவசாயிகளும் தாமாக முன்வந்து போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.
அரசாங்கத்தில் சிலரது தான்தோன்றித்தனமான செயற்பாடுகளால் 69 இலட்சம் மக்களுக்காக தனித்துச் செயற்பட வேண்டிய நிலை எமக்கு ஏற்பட்டுள்ளது= என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Leave a Reply