அரசைக் கவிழ்க்க ஒன்றிணையுங்கள்!

கோத்தாபய அரசை வீட்டுக்கு அனுப்புவதற்கு அனைவரும் ஒன்றிணைந்து செயற்படவேண்டும் என்று மக்கள் விடுதலை முன்னணியின் தேசிய அமைப்பாளர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார்.

மக்கள் விடுதலை முன்னணியின் ‘ஊரிலிருந்து தொடங்குவோம்’ என்ற தொனிப்பொருளிலான மக்களுடானான உரையாடல் மற்றும் துண்டுபிரசுர விநியோகத்தை யாழ்ப்பாணத்தில் நேற்று ஆரம்பித்து வைத்த பின்னர் அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

முற்பகல் 10.30 மணியளவில் யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையத்தில் ஆரம்பித்த குறித்த நிகழ்வில் மக்கள் விடுதலை முன்னணியின் தேசிய அமைப்பாளர் பிமல் ரத்னாயக்க, அந்தக்கட்சியின் யாழ். மாவட்ட அமைப்பாளர் இராமலிங்கம் சந்திரசேகரம் உள்ளிட்ட கட்சி உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

இதன்போது வியாபாரிகளிடமும் பொதுமக்களிடமும் இந்த அரசாங்கத்தின் செயற்பாடுகள் தொடர்பாக விளக்கம் அளிக்கப்பட்டதுடன் ஆட்சி மாற்றத்தின் அவசியம் தொடர்பாகவும் வலியுறுத்தப்பட்டது.
இதன்போது, பிமல் ரத்நாயக்க மேலும் தெரிவிக்கையில்,
தற்போதுள்ள அரசாங்கமானது மக்களை ஏமாற்றும் தனது நாடகத்தை அரங்கேற்றி வருகின்றது. குறிப்பாக இராணுவத்தைப் பயன்படுத்தி சேதன விவசாயத்தை வலுக்கட்டாயமாக முன்னெடுப்பேன் என ஜனாதிபதி தெரிவிக்கும் அளவுக்கு இந்த நாட்டில் அராஜகம் தலைவிரித்தாடுகின்றது.

தற்போது பால்மா, எரிவாயு போன்றவற்றுக்கு தட்டுப்பாடு நிலவிவருகின்ற நிலையில், கோத்தாபய அரசாங்கமானது தனது குடும்ப ஆட்சியை மேன்மேலும் விரிவுபடுத்துகின்றது.
நாட்டில் ஒரு கோடி மக்கள் விவசாயிகளாக உள்ள நிலையில் , நெற்கதிர் என்றாலே என்னவென்று தெரியாத ஜனாதிபதிதான் தற்போது விவசாயப் புரட்சி ஏற்படுத்துவேன் என்றுகூறி மக்களை ஏமாற்றி வருகின்றார். எனவே, எதிர்வரும் காலத்தில் அனைவரும் ஒன்றிணைந்து ஆட்சியை மாற்றி நாட்டை முன்னோக்கி கொண்டுச்செல்வதற்கு ஒத்துழைக்க வேண்டும். – என்றார்.

Leave a Reply