தடுப்பூசி பெறாதவர்களை நிகழ்வுக்கு அழைக்காதீர்!

கொரோனாத் தடுப்பூசி ஏற்றாதவர்களை நிகழ்வுகளுக்கு அழைக்காதீர்கள் என்று சாவகச்சேரி சுகாதார மருத்துவ அதிகாரி பணிமனை அறிவித்துள்ளது.
கொரோனாத் தடுப்பூசி முழுமையாக ஏற்றிக் கொண்டதற்கான தடுப்பூசி அட்டை இல்லாத 16 வயதுக்கு மேற்பட்டவர்களை வீடுகள் கோவில்கள், திருமண மண்டபங்கள் போன்றவற்றில் நடைபெறும் நிகழ்வுகளுக்கு விருந்தினராகவோ அல்லது பங்குபற்றுநராகவோ அழைப்பதை முற்றாக தவிர்த்துக்கொள்ளுங்கள்.

தடுப்பூசி ஏற்றாத பலர் கொரோனாவைக் கட்டுப்படுத்துவதற்கான ஏனைய சுகாதார நடைமுறைகளையும் சரிவர பின்பற்றாதவர்களாகவே அடையாளப் படுத்தப்படுகின்றனர்.
இவர்கள் முனைப்பான காவிகளாக தொழிற்பட்டு கொரோனா பரவல் அதிகரித்துச் செல்ல காரணமாக இருக்கின்றனர். கொரோனாவால் உயிரிழப்பவர்களின் அதிகமானோர் தடுப்பூசி ஏற்றாதவர்களே என்பது ஆய்வுகள் மூலம் நிரூபிக்கப்பட்டமையாலேயே உலகின் பலநாடுகள் தடுப்பூசி பெறாதவர்களை பொது இடங்களில் பிரவேசிப்பதை தடைசெய்து வருகின்றன.

உலகின் பல நாடுகள் கொரோனா தடுப்பூசியின் பூஸ்டர் டோஸை மும்முரமாக செலுத்த தொடங்கிவிட்டனர். ஆனால், இங்கு இன்னமும் முதலாவது டோஸைக்கூட பெற்றுக் கொள்ளாமல் அடம் பிடிப்பவர்களை நிகழ்வுகளுக்கு அழைப்பதை தவிர்த்து, அவர்கள் இழைத்துவரும் தவறை உணர்ந்துகொள்ள சந்தர்ப்பம் அளியுங்கள்=ம்என்று கோரியுள்ளனர்.

Leave a Reply