இலங்கையின் ஜனாதிபதிகள் மற்றும் அரச தலைவர்கள் வெளிநாடுகளுக்கு வழங்கிய உறுதிமொழிகள் இதுவரை நிறைவேற்றப்படவில்லை. எனவேதான், அபிவிருத்தி அடைந்த நாடுகள் இலங்கைக்கு உதவ முன்வருவதில்லை என்று தமிழ் தேசியக்கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் தெரிவித்துள்ளார்.
இனப்பிரச்சனை தொடர்பாக நாட்டின் முன்னைய தலைவர்கள், உறுதிமொழிகளை வழங்கினர். எனினும் அது எதுவுமே நிறைவேற்றப்படவில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்
நாடாளுமன்றத்தில் இன்று உரை நிகழ்த்திய அவர்.
நாடு இன்று பாரிய பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்துள்ள நிலையில், பருவநிலை மாநாட்டுக்கு சென்றிருந்த இலங்கையின் ஜனாதிபதி, சேதனப்பசளைகளை பயன்படுத்தி இயற்கை விவசாயத்தை நடைமுறைப்படுத்தும் முதல் நாடாக இலங்கையை மாற்றப்போவதாக தெரிவித்திருந்தார்.
எனினும் இயற்கை விவசாயத்தை இலங்கையில் முழுமையாக நடைமுறைப்படுத்த முடியாது என்று அனைவருக்கும் தெரியும். எனவே இது உண்மையில் கேலிக்குரிய விடயமாக உள்ளது.
கொள்கை ரீதியான செயற்பாடுகள் தொடர்பில் அண்மையில் ஜனாதிபதி கழுத்தை பிடிப்பது குறித்த கருத்தை வெளியிட்டிருந்தார்.
பசளை பற்றாக்குறை காரணமாக விவசாயிகள் மாத்திரமன்றி, பொதுமக்களும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். எனவே அவர்கள், இறுதியில் அரசாங்கத்தை கழுத்தை பிடித்து வெளியில் தள்ளுவார்கள்.
இலங்கையில் தற்போதைய நிலையில் டொலர் இருப்பு 2 பில்லியன் அளவிலேயே உள்ளது. எனவே எதிர்காலத்தில் இறக்குமதிகளில் பாரிய பிரச்சினை ஏற்படும்.
இலங்கையில் டொலர் பிரச்சினை, பசளைப்பிரச்சினை தொடர்கின்ற நிலையில், அடுத்து எரிபொருள் பிரச்சினை எதிர்பார்க்கப்படுகிறது. இதன்போது, எரிபொருளுக்கும் கறுப்புச்சந்தை உருவாக்கப்படலாம்.
நாட்டின் இயற்கை விவசாயத்தை நடைமுறைப்படுத்தும்போது நட்டம் ஏற்பட்டால் நட்டஈட்டை தருவதாக மட்டக்களப்பில் சிலர் கூறியுள்ளனர். இதனை ஏற்றுக்கொள்ளமுடியாது.
இந்த நட்டஈடு, மெதமுலன்ன அல்லது ராஜபக்சர்களிடம் இருந்து தரப்படப்போவதில்லை. நாட்டின் வரிசெலுத்துவோரின் பணமே நட்டஈடாக தரப்படப்போகிறது.
இந்த சூழ்நிலையில் இலங்கையில் உணவு தட்டுப்பாடு ஏற்படுவதை தடுக்கமுடியாது என்று நிபுணர் கூறியுள்ளார். அத்துடன் வங்கிமுறையில் பிரச்சினை.
மேலும், பொதுமகனை தாக்கியதாக குற்றம் சுமத்தப்பட்ட மட்டக்களப்பு காவல்துறை உறுப்பினர் ஒருவர் பதவிநீக்கம் செய்யப்பட்டார்.
எனினும், சப்ரகமுவயில் பொதுமகனை தாக்கிய அதிகாரிக்கு இடமாற்றம் வழங்கப்பட்டது. இதுவே நாட்டில் இருக்கின்ற ஒரே நாடு ஒரே சட்டமாகும்.
அதேநேரம், உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் சந்தேகத்தில் பல முஸ்லிம் இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். எனினும் அது தொடர்பில் எந்தவொரு முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினரும் கேள்வி எழுப்புவதில்லை என்றும் அவர் தெரிவித்தார்.






