கொழும்பு 12 பிரதேசத்தை சேர்ந்த மூன்று சிறுமிகள் காணாமல் போயுள்ளதாக அவர்களின் தந்தை நேற்று முறைப்பாடு செய்துள்ளதாக வாழைத்தோட்டம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
முச்சக்கர வண்டியில் நேற்று காலை 8 மணியளவில் வீட்டில் இருந்து புறப்பட்டுச் சென்ற இந்த மூன்று சிறுமிகளும் இதுவரை வீடு திரும்பவில்லை எனவும் அவர்கள் சம்பந்தமாக எந்த தகவலும் கிடைக்கவில்லை என அவர்களின் தந்தை முறைப்பாடு செய்துள்ளார்.
ஒரே குடும்பத்தை சேர்ந்த இரண்டு சகோதரிகளும், அவர்களின் உறவினர் முறை சகோதரியான சிறுமியுமே இவ்வாறு காணாமல் போயுள்ளனர்.
இவர்கள் மூவரும் 13 முதல் 15 வயதுக்குட்பட்டவர்கள் என தெரியவருகிறது.
இந்த மூன்று சிறுமிகளும் நேற்று முற்பகல் கொழும்பு விகாரமஹாதேவி பூங்கா மற்றும் காலிமுகத் திடல் பகுதிகளில் காணப்பட்டுள்ளதாக அவர்களின் தொலைபேசி இலக்கங்கள் ஊடாக மேற்கொள்ளப்பட்ட தேடுதலில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.
இதுதொடர்பில், வாழைத்தோட்டம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.






