வட்டுக்கோட்டை தெற்கு முதலி கோவிலடியில் இடம்பெற்ற வன்முறையுடன் தொடர்புடைய முக்கிய சந்தேகநபர்கள் இன்று மல்லாகம் நீதிமன்றால் பிணையில் விடுவிக்கப்பட்ட நிலையில், பொலிஸார் முன் வெடி கொளுத்தி கொண்டாடப்பட்டுள்ளது.
பிணையில் விடுவிக்கப்பட்ட சந்தேகநபர்களின் கும்பலே தம்மை அவமதித்து இந்தச் செயலைச் செய்ததாக வட்டுக்கோட்டை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வட்டுக்கோட்டை தெற்கு முதலி கோவிலடியில் கடந்த செப்ரெம்பர் மாதம் கிராமத்துக்குள் புகுந்த வன்முறைக் கும்பல் நடத்திய வாள்வெட்டில் மூவர் படுகாயமடைந்தனர்.
சாதிய ஒடுக்குமுறையால் இந்த மோதல் இடம்பெற்றது என்று அந்தப் பகுதியைச் சேர்ந்தோர் குற்றஞ்சாட்டினர்.
சம்பவத்துடன் தொடர்புடைய சங்கரத்தையைச் சேர்ந்த பிருந்தாபன் என்ற சந்தேக நபர் கைது செய்யப்பட்ட நிலையில் மேலும் நால்வர் நீதிமன்றில் சரணடைந்திருந்தனர்.
அவர்கள் இன்று நவம்பர் 9ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தனர்.
மல்லாகம் நீதிமன்றில் சந்தேகநபர்கள் சார்பில் முன்னிலையான சட்டத்தரணிகள் முன்வைத்த பிணை விண்ணப்பத்தை அடுத்து வட்டுக்கோட்டை பொலிஸார் ஆட்சேபனை தெரிவிக்காத நிலையில், ஐவரும் பிணையில் விடுவிக்கப்பட்டு வழக்கு வரும் செவ்வாய்க்கிழமை வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
வட்டுக்கோட்டை பொலிஸ் உத்தியோகத்தர்கள் நீதிமன்றிலிருந்து பொலிஸ் நிலையத்துக்கு திரும்பிய போது, அவர்களுக்கு முன் சந்தேகநபர்களைச் சேர்ந்த கும்பல் வெடி கொழுத்தி கொண்டாடினார்கள் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த வழக்கில் பிருந்தாபன் மற்றும் சுதன் ஆகிய இருவருக்கும் ஏற்கனவே வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில் பொலிஸார் ஆட்சேபனை தெரிவிக்காத நிலையில் இன்று பிணையில் விடுவிக்கப்பட்டனர்.






