தமிழர் பகுதிகளில் திட்டமிட்ட சிங்களமயமாக்கல் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுவதாக, வடக்கு, கிழக்கு மாகாணங்களைச் சோ்ந்த கத்தோலிக்க ஆயர்கள் சுவிஸ்ட்லாந்து தூதுவரிடம் தெரிவித்துள்ளனர்.
வடக்கு கிழக்கு பகுதிகளில் பணியாற்றிவரும் ஆயர்களுக்கும் இலங்கை மற்றும் மாலைதீவுக்கான சுவிஸ்லாந்தின் தூதுவர் டொமினிக் பார்க்லர் மற்றும் அவரின் குழுவினருக்மிடையிலான சந்திப்பு யாழ். ஆயர் இல்லத்தில் இன்று மதியம் நடைபெற்றுள்ளது.
இச்சந்திப்பில் வடக்கு கிழக்கு பகுதிகளில் தற்போது நிலவிவரும் அரசியல் மற்றும் அபிவிருத்திப் பணிகள் பற்றிய விடயங்கள் கலந்துரையாடப்பட்டன.
இதன்போது ஆயர்கள் இங்கு நிலவிவரும் தற்போதைய நெருக்கடி நிலமைகளை எடுத்துக்கூறியுள்ளனர்.
மேலும், வடக்கு கிழக்கு பகுதிகளில் அபிவிருத்திப்பணிகளில் அரசு அசமந்தப்போக்குடன் செயற்பட்டு வருவதையும், சுட்டிக் காட்டியுள்ளனர்.
இப்பிரதேசங்களில் இந்திய அரசு முன்னெடுக்க முனையும் பணிகளுக்கு தடைகளை ஏற்படுத்தி அவ் அபிவிருத்திப்பணிகளை தென்பகுதியில் முன்னெடுக்க முயற்சிப்பதையும் குறிப்பிட்டனர்.
அத்துடன் திருகோணமலை மன்னார் முல்லைத்தீவு ஆகிய பகுதிகளில் மறைமுகமாகவும் நேரடியாகவும் அரசு முன்னெடுத்து வரும் சிங்களமயமாக்கல் செயற்திட்டங்களை விபரித்ததோடு மக்கள் இலங்கை அரசின் மீது கொண்டுள்ள அதிருப்தியையும் வெளிக்காட்டியுள்ளனர்.






