
அலரிமாளிகை நிகழ்வில் கோட்டாபாய எச்சரிக்கை.
நாட்டின் எதிர்காலத்திற்காக சரியானவற்றுக்கு ஒத்துழைப்பு வழங்குவதை விடுத்து அனைத்திற்கும் எதிர்ப்பு தெரிவிக்கும் எதிர்கட்சியினரின் செயற்பாடு கவலையளிக்கின்றது. போராட்டங்களால் மீண்டும் கொரோனா தொற்றுப் பரவல் ஏற்படுவதற்கான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் நாட்டை மீண்டும் ஒரு முறை முடக்க நேரிடலாம். இவ்வாறு ஜனாதிபதி கோட்டாபாய ராஜபக்ஷ தெரிவித்தார்.
இலங்கையின் தேசிய விஞ்ஞான தினம் மற்றும் விஞ்ஞான வாரத்தை முன்னிட்டு அலரிமாளிகையில் நேற்று நடைபெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
இதன்போது அவர் மேலும் தெரிவித்ததாவது:
நாடு திறக்கப்பட்டு புதிய பொதுமைப்படுத்தலின் கீழ் அனைத்துச் செயற்பாடுகளும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இருப்பினும் போராட்டங்கள், ஊர்வலங்கள் உள்ளிட்ட பல்வேறு செயற்பாடுகள் காரணமாக மீண்டும் கொரோனாத் தொற்றுப் பரவல் ஏற்படுவதற்கான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் நாட்டை மீண்டும் ஒருமுறை முடக்க நேரிடலாம்.
இதனால், பொதுமக்களுக்கும் நாட்டின் பொருளாதாரத்திற்கும் ஏற்படும் பாதிப்புக்கள் தொடர்பில் எதிர்க்கட்சியினர் புரிந்து கொள்ளவேண்டும்.
ஐந்து வருடகால ஆட்சியின் போது ஏற்பட்ட தோல்விகள் மற்றும் பலவீனங்கள் காரணமாகவே அவர்களுக்குப் பதிலாக என்னை மக்கள் ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுத்தனர். இருப்பினும் முன்னதாக அதிகாரத்தில் இருந்திருக்காதவர்கள் போல் எதிர்க்கட்சியினர் தற்போது செயற்படுவது கவலையளிக்கின்றது. இந்த முறைமையை மாற்றுவது எதிர்காலத்திற்கான தற்காலத் தேவையாகவுள்ளது.
தற்காலத்துறையின் அனைத்துத் துறைகளிலும் விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்பத்தின் ஆளுகை காணப்படுகின்றது. புதிய தொழில்நுட்ப அறிவின்றி எமது எதிர்கால சந்ததியினர் இந்த உலகத்துடன் முன்னோக்கி செல்ல முடியாது. இதனைப் புரிந்து கொண்டு புதிய தொழில்நுட்பத்துடன் கூடிய எதிர்கால சந்ததியினருக்காக கல்வியில் உடனடியாக மாற்றம் ஏற்படுத்த வேண்டியது அவசியம் என்றார்.






