பழுதடைந்த வீதிகளை புனரமைக்க புத்தளம் பிரதேச சபை நடவடிக்கை!

புத்தளம் பிரதேச சபைக்கு உட்பட்ட பல உள்வீதிகள் வெள்ளத்தால் சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கடந்த சில தினங்களாக பெய்துவரும் கடும் மழை காரணமாக என்றும் இல்லாதவாறு இம்முறை புத்தளம் மாவட்டத்தில் பல பகுதிகள் வெள்ளத்தால் மூழ்கியது.

இதனால், புத்தளம் பிரதேச சபைக்கு உட்பட்ட ஸ்ரீமாபுரம், மதுரங்குளி, ஹிதாயத்நகர், நாகவில்லு, பாலாவி, ரத்மல்யாய, அல்காசிமி சிட்டி உள்ளிட்ட பல பிரதேசங்களில் காணப்படும் வீதிகள் கடுமையாக சிதைவடைந்து சேதமடைந்துள்ளன.

இவ்வாறு குறித்த பகுதிகளிலுள்ள உள்வீதிகள் சேதமடைந்துள்ளதால் போக்குவரத்து செய்வதில் தாம் பல சிரமங்களை எதிர் நோக்கி வருவதாகவும் மக்கள் குறிப்பிடுகின்றனர்.

இதேவேளை, புத்தளம் பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதிகளில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வீதிகளை புத்தளம் பிரதேச சபைத் தலைவர் அஞ்சன சந்தருவன் இன்று மாலை நேரில் விஜயம் செய்து பார்வையிட்டார்.

புத்தளம் பிரதேச சபை உறுப்பினர் ரிபாஸ் நஸீர் உட்பட சிலரும் விஜயம் செய்திருந்தனர். சேதமடைந்த வீதிகளை மீளவும் புனரமைப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரிவிட்டுள்ளதாக புத்தளம் பிரதேச சபை தலைவர் அஞ்சன சந்தருவன் தெரிவித்தார்.

அத்துடன், பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதிகளில் வீதி மின் விளக்குகள் பழுதடைந்திருந்தால் அதனையும் உடனடியாக திருத்திக் கொடுப்பதற்கும் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

Leave a Reply