
காணாமலாக்கப்பட்டோரின் குடும்ப ஒன்றியத்தினர் நீதியமைச்சு, நிதியமைச்சு மற்றும் பிரதமர் அலுவலகம் ஆகியவற்றுக்கு முன்பாக நேற்றுக்கவனவீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
காணாமலாக்கப்பட்டோரின் குடும்பங்களுக்கு மாதாந்தம் 6 ஆயிரம் ரூபா இடைக்காலக்கொடுப்பனவை வழங்குவதற்கு அவசியமான நிதி ஒதுக்கீட்டை, அடுத்த ஆண்டுக்கான பாதீட்டில் மேற்கொள்ளுமாறு வலியுறுத்தி இந்தக் கவனவீர்ப்பு மேற்கொள்ளப்பட்டது.
2019 ஆம் ஆண்டுக்கான வரவு, செலவுத்திட்டத்தில் காணாமலாக்கப்பட்டோரின் குடும்பங்களுக்கு மாதாந்தம் தலா 6 ரூபா வீதம் வழங்குவதற்காக 500 மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்வதற்கான யோசனை முன்வைக்கப்பட்டது.
அதனைத்தொடர்ந்து ‘காணவில்லை’ என்பதை உறுதிப்படுத்தும் வகையிலான சான்றிதழ் கிடைக்கப்பெற்ற குடும்பங்கள் மற்றும் 2010 ஆம் ஆண்டின் 10 ஆம் இலக்க மரணப்பதிவுச்சட்டத்தின் 2 ஆவது சரத்துக்கு அமைவாக மரணத்துக்கான காரணமாக ‘நீண்டகாலமாகக் காணவில்லை’ என்று குறிப்பிடப்பட்ட சான்றிதழைத் தம்வசம் கொண்டிருக்கும் குடும்பங்களுக்கு 6 ஆயிரம் ரூபா இடைக்காலக்கொடுப்பனவை வழங்குவதற்கான அமைச்சரவை யோசனைக்கு 2019 ஆம் ஆண்டு ஒக்ரோபர் 18 ஆம் திகதி அனுமதியளிக்கப்பட்டது.
அதன்படி ஒதுக்கீடு செய்யப்பட்ட 500 மில்லியன் ரூபாவில் இடைக்காலக்கொடுப்பனவாக 153 குடும்பங்களுக்கு தலா 6 ஆயிரம் ரூபா வீதம் 11 மில்லியன் ரூபா செலுத்தப்பட்ட நிலையில், மேலும் 489 மில்லியன் ரூபா எஞ்சியுள்ளது.
எனவே நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவிருக்கின்ற அடுத்த ஆண்டுக்கான பாதீடு ஊடாக எஞ்சியுள்ள 489 மில்லியன் ரூபாவைப் பயன்படுத்தி காணாமலாக்கப்பட்டோரின் குடும்பங்களுக்கு மாதாந்தம் 6 ஆயிரம் ரூபா இடைக்காலக்கொடுப்பனவு வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்குமாறும் அதற்குத் தேவையானளவு நிதியை ஒதுக்கீடு செய்யுமாறும் போராட்டத்தில் ஈடுபட்டோர். கோரிக்கைவிடுத்தனர்.





