
எதிர்வரும் 2022 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தை இன்று வெள்ளிக்கிழமை பிற்பகல் 2 மணிக்கு நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ பாராளுமன்றத்தில் சமர்பிக்கவுள்ளார்.
இலங்கையின் 76ஆவது வரவு-செலவுத்திட்டத்தை நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ, நிதியமைச்சர் என்ற வகையில் முதல் முறையாக சமர்ப்பித்து உரை நிகழ்த்தவுள்ளார்.
இம்முறை வரவு செலவுத்திட்டத்திற்கு 250,534 கோடியே 6,558,000ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. இன்று சமர்ப்பிக்கப்படும் வரவு-செலவுத்திட்டம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கத்தின் இரண்டாவது வரவு – செலவுத் திட்டமாகும்.
வரவு – செலவு திட்டத்திற்கான நிதி ஒதுக்கீட்டுச் சட்டமூலம் ஒக்டோபர் மாதம் 07ஆம் திகதி நிதி அமைச்சரினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டிருந்தது.
இந்த வரவு- செலவுத்திட்டத்தின் இரண்டாம் மதிப்பீடு மீதான விவாதம் நாளை ஆரம்பமாகவுள்ளது.
குழு நிலை மீதான விவாதங்களுக்கு.23ஆம் திகதி செவ்வாய்க்கிழமை முதல் 10 ஆம் திகதி வெள்ளிக்கிழமை வரையான ஞாயிறு தவிர்ந்த 16 நாட்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.
மூன்றாம் மதிப்பீடு மீதான வாக்கெடுப்பு 10 ஆம் திகதி வெள்ளிக்கிழமை மாலை 5 மணிக்கு இடம்பெறும்.
வரவுசெலவுத்திட்டம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் இன்று வெள்ளிக்கிழமை முதல் வரவு-செலவுத்திட்ட விவாதம் நடைபெறும் காலப்பகுதியில் சுகாதார பாதுகாப்பு ஒழுங்குவிதிகளுக்கு அமைய பாராளுமன்ற அமர்வுகளை முன்னெடுக்க நடவடிக்க எடுக்கப்பட்டிருப்பதாக பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக தசநாயக தெரிவித்தார்.
வரவுசெலவுத்திட்ட விவாதம் நடைபெறும் காலப்பகுதியில் பொதுமக்கள் கலரி மக்களுக்காக திறக்கப்படாது. வரையறுக்கப்பட்ட அரசாங்க அதிகாரிகள் வரவு-செலவுத்திட்ட குழுநிலை விவாதத்தின் போது அனுமதிக்கப்படவுள்ளனர்.
வெளிநாட்டுத் தூதுவர்கள் மற்றும் உயர்ஸ்தானிகர்களுக்காக விசேட விருந்தினர்கள் கலரி திறக்கப்பட்டிருக்கும். வரவு-செலவுத்திட்ட உரையின் பின்னர் நிதியமைச்சரினால் ஏற்பாடு செய்யப்படும் சம்பிரதாயபூர்வமான தேநீர் விருந்துபசாரம் இடம்பெறும்.
மேலும் கேட்டல் குறைபாடு உள்ளவர்களுக்காக இவ்வருடம் வரவுசெலவுத்திட்ட விவாதத்தை சைகை மொழியிலும் ஒளிபரப்புவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
“கொழும்பு தமிழின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/colombotamil
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் கொழும்பு தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Get the latest Tamil news here. You can also read all the news by following us on Twitter, Facebook and Telegram.





